பிரகாஷ் ஜா நடிப்பில் உருவாகியுள்ள ‘மட்டோ கி சைக்கள்’ திரைப்படம், 25ஆவது புசான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.
அறிமுக இயக்குநர் கானி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சுதிர்பாய் மிஷ்ரா எனும் அறிமுக தயாரிப்பாளர் தயாரித்துள்ளார். ஆசிய திரைப்படங்களின் பிரிவின் கீழ் இப்படம் திரையிடப்படவுள்ளது.
சைக்கிள் வாங்க ஒரு குடும்பம் எந்த அளவு சிரமப்படுகிறது, அந்த குடும்பத்தின் வாழ்க்கை எப்படி சைக்கிள் சார்ந்து இருக்கிறது என்பதை சுற்றி இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பிரகாஷ் ஜா, அனிதா சௌத்ரி, ஆரோகி ஷர்மா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் கானி, புசான் சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக் குழுவுக்கும், இந்தக் கதை மீது நம்பிக்கை வைத்த பிரகாஷ் ஜாவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு கிடைத்த குழுவினர் மிக அருமையானவர்கள், அவர்களால்தான் இப்படம் சாத்தியமானது என தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கும் புசான் சர்வதேச திரைப்பட விழா, அக்டோபர் 30ஆம் தேதி நிறைவடைகிறது. இதில் 194 படங்கள் திரையிடப்படவுள்ளன.