உலகை அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று இந்தியாவையும் ஒரு கை பார்த்து வருகிறது. இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று குறித்து தனது சமூக வலைதள பக்கம் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த பாலிவுட் பிக் பி அமிதாப்பச்சனும் இதே நோய்த்தொற்று இருப்பது நேற்று முன்தினம் (ஜூலை11) தெரியவந்தது.
அடுத்த சில மணி நேரங்களில் மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆரத்யாவுக்கும் கரோனா நோயத்தொற்று பாதிப்பிருப்பது தெரியவந்தது.
இது திரைப்பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் இடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவர்கள் பூரண குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களும் திரை பிரபலங்களும் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அமிtop! ரசிகனாய் என் அபிமான நட்சத்திர வரிசையில் உயர்நிலையில் நிற்பவர்! Positive-இன்றல்ல, என்றுமே நினைப்பவர் - உணர்வலைகளை பரப்புபவர். மருத்துவமனையிலிருந்து அவர் பேசப் பேச கண்கள் கசிந்தன, மூப்பு என்ற ஒரே பலவீனத்தை தவிர மிக strong மனிதர். மகனின் கைகளை பற்றியபடி நலமோடு திரும்ப பிரார்த்தனைகள்" என பதிவிட்டுள்ளார்.