'நாகினி' டிவி தொடர் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை மெளனி ராய். டிவி தொடர்களிலிருந்து சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த இவர், கடந்த ஆண்டு வெளியான 'கோல்டு' படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
இவர் மார்ச் மாதம் இறுதியில் ஒரு பத்திரிக்கை போட்டோ ஷூட்டுக்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அபுதாபியில் போட்டோஷூட் முடிந்தவுடன் இரண்டு வாரம் மெளனி ராய் அங்கேயே தங்கியிருந்தார். காரணம், இரண்டாம் கட்ட போட்டோ ஷூட் ஏப்ரல் 15ஆம் தேதி தான் தொடங்கவிருந்தது. ஆனால் அதற்குள் உலகின் பல்வேறு நாடுகள் கரோனா தொற்று அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தன.
இதனையடுத்து மெளனி ராய் அபுதாபியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வீடு திரும்பமுடியாமல் தவித்து வருகிறார். இதுகுறித்து மெளனி ராய் கூறுகையில், "போட்டோஷூட் முடிந்தவுடன் அபுதாபியில் இரண்டு வாரங்கள் தங்கியிருக்க முடிவு செய்தேன். அதற்குள் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நான் நினைத்துகூடப் பார்க்கவில்லை. நான்கு நாள்களுக்கான ஆடைகளுடன் இங்கு சிக்கித் தவிக்கின்றேன்.
இந்த நேரத்தில் என் அம்மாவின் பக்கத்தில் சகோதரர் இருக்கிறார் என்று நான் நிம்மதியடைகிறேன். என் உறவினர்களும் அருகில் இருப்பது எனக்கு ஒரு பக்கபலமாக இருக்கிறது. நான் கவலைக்கும் அமைதிக்கும் இடையில் வாழ்ந்து வருகிறேன். உலகெங்கிலும் உள்ள அனைவரும் இந்தக் கடினமான நேரத்தைக் கடந்து செல்ல இருக்கிறோம். விரைவில் இந்தியா திரும்புவேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: எச்ஐவி பாதிப்பு குழந்தைகளுக்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய 'நாகினி'