ஹைதராபாத்: ஆமிர் கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு லடாக்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போர் காட்சியில் நடிப்பதற்காக நாக சைத்தன்யா அவருடன் இணைகிறார்.
கார்கில் போர் சூழலை படமாக்க ‘லால் சிங் சத்தா’ படக்குழுவினர் லடாக்கில் உள்ளனர். மே, ஜூன் மாதங்களில் இதற்கான படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் பர்வேஸ் சேக் ஒரு மாபெரும் போர்க்கள செட்டை அமைத்துள்ளார். இவர் இதற்கு முன்பு ரித்திக், டைகர் ஷ்ரோப் நடித்த ‘வார்’ படத்தில் பணியாற்றியவர்.
மே 6ஆம் தேதி ஆமிர் கான், பர்வேஸ் உள்பட படக்குழுவினர் சிலர் லொக்கேசன் பார்ப்பதற்காக லடாக் வந்தனர். பின்னர் தளம் முடிவு செய்யப்பட்டு போர்க்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நடிக்க நாக சைத்தன்யா படக்குழுவுடன் இணைகிறார்.
1994ஆம் ஆண்டு டாம் ஹேங்ஸ் நடிப்பில் வெளியான ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக்கான இதில் பெஞ்சமின் புஃபோர்ட் கதாபாத்திரத்தில் நாக சைத்தன்யா நடிக்கிறார். இந்த ஆண்டு கிறிஸ்துமஸையொட்டி இப்படம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.