'தனாஜி' படத்தைத் தொடர்ந்து அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மைதான்'. அமித் ரவீந்திரநாத் இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ புரோஜக்ட்ஸ், ஃப்ரெஷ் லைம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
சயத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகிவரும் இப்படத்தில் சயத் அப்துல் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடிக்கிறார். இதில் அஜய் தேவ்கனுடன் பிரியாமணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவாகி வருகிறது.
1951-1962 காலகட்டத்தில் இந்தியாவின் கால்பந்து விளையாட்டை உலக அரங்குக்கு கொண்டுச் செல்ல அயராது பாடுபட்ட சயத் அப்துல், இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
ஆசிரியராக இருந்து கால்பந்து பயிற்சியாளராக தனது பணியை திறம்படச் செய்த இவர், 1956ஆம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் அரையிறுதி வரை போராடி இந்திய அணி அதிகபட்ச சாதனைப் படைக்க முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர்.
இதனையடுத்து இப்படத்திற்காக மும்பையில் 16 ஏக்கரில் பிரமாண்ட செட் போடப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஜூன் முதல் வாரத்தில் மகாராஷ்டிராவில் பருவமழை தொடங்கவிருப்பதால் மைதான் படத்துக்காக போடப்பட்ட செட் அகற்றப்பட்டுள்ளது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் கூறியிருப்பதாவது, "மும்பையில் 16 ஏக்கர் பரப்பளவில் படத்திற்காக பிரமாண்ட் செட் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது தான் கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தியது. இதனால் அங்கு இரண்டு மாத காலம் அங்கு படப்பிடிப்பு நடத்தப்படவில்லை.
ஜூன் மாதம் முதல் பருவமழை வரயிருப்பதால் அந்த செட் தற்போது அகற்றப்பட்டது. மீண்டும் இந்த செட் அமைக்க இரண்டு மாத காலம் ஆகும். செப்டம்பரில் செட் அமைக்க தொடங்கினால் படப்பிடிப்பு ஆரம்பிக்க நம்பர் ஆகலாம். நல்வாய்ப்பாக உள்ளரங்கு, வெளிப்புற காட்சிகளை லக்னோ - கொல்கத்தாவில் படமாக்கிவிட்டோம்" என கூறினார். இப்படம் இந்தாண்டு டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உள்ள சூழலால் இப்படத்தின் வெளியிட்டு தேதி மாற்றிவைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'நேர்கொண்ட பார்வை'யை 'மைதான்'க்கு மாற்றிய போனி கபூர்