லண்டனில் இருந்து மார்ச் மாதம் 9 ஆம் தேதி மும்பை வந்த கனிகா கபூர் பின் லக்னோவில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அதில் அரசியல் பிரபலங்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
லண்டனில் இருந்து வந்ததை யாரிடமும் கூறாமால் கனிகா இருந்துள்ளார். மேலும் கரோனா வைரஸ் தொற்றை மறைத்து இது போன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் அவரை சமூகவலைத்தளத்தில் பலரும் திட்டி தீர்த்தனர். கனிகாவை கைது செய்ய வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் பலர் புகார் அளித்தனர்.
இதனையடுத்து கனிகா கபூர் மீது லக்னோ காவல்துறையினர் ஐபிசி பிரிவு 269 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது) மற்றும் பிரிவு 270 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ள தீங்கு விளைவிக்கும் செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு குறித்து கனிகா கபூர் தனது தரப்பு அறிக்கைய காவல்துறையினரிடம் அளிக்குமாறு கிருஷ்ணா நகர் ஏ.சி.பி., தீபக் குமார் சிங் சார்பில் காவல்துறை அவரது வீட்டில் ஒரு நோட்டீஸை ஒட்டியுள்ளனர்.
மேலும் கனிகா கபூர் காவல் நிலையத்திற்கு வந்து தனது எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்க வேண்டும் என்றும் இதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள கனிகா கபூர் இது குறித்து விரைவில் தனது தரப்பு அறிக்கையை காவல்துறையினரிடம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.