பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் காரணமாகத்தான் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறி பல்வேறு முன்னணி பாலிவுட் பிரபலங்களுடன் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாக கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்பின், பாலிவுட் மாஃபியாக்கள், பாலிவுட்டில் உள்ள போதைப் பொருள் பழக்கம் ஆகியவை குறித்து தொடர்ச்சியாக கங்கனா அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து, மும்பை ’பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ போல உள்ளதாகத் தெரிவித்து, மும்பை காவல் துறை, சிவசேனா கட்சி என அனைத்து தரப்பினரையும் கங்கனா கடுமையாக சாடத் தொடங்கினார்.
பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கி, இறுதியில், சிவசேனா-கங்கனா என மோதல் முற்றி சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்தேறின.
அதனைத் தொடர்ந்து, மும்பை பாந்த்ராவில் உள்ள கங்கனாவின் அலுவலகம் மற்றும் வீட்டின் பெரும்பகுதி கட்டடங்கள், விதிகளை மீறி கட்டப்பட்டிருந்ததாகக் கூறி மும்பை மாநகராட்சி ஆணையம் அக்கட்டடத்தை இடித்தது. பின்னர் மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இடிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத் நேற்று (செப்.19) பிரிஹான் மும்பை மாநகராட்சியை (BMC) மகாராஷ்டிர மாநில அரசின் செல்லப்பிராணி எனக் குறிப்பிட்டு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து அவர் பகிர்ந்துள்ள ஸ்டோரியில், கட்டடங்களை இடிப்பது தொடர்பாக மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம், 1888இன் பிரிவு 351ஆல் பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்டங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.
"நகராட்சி சட்டங்களின்படி கட்டடங்களை இடிப்பதற்கு முன் பாதிக்கப்படவுள்ள நபருக்கு 15 நாள்கள் முன்னரே நோட்டீஸ் கொடுப்பது அவசியம். நகராட்சிக் கழகம் இந்த நடைமுறையை மீறுதல் முற்றிலும் சட்டவிரோதமானது. அவ்வாறு செய்யும்பட்சத்தில் இழப்பீடுகள் வழங்குதல் வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நடிகை கங்கனா "மகாராஷ்டிர அரசாங்கத்திற்கும் அதன் செல்லப்பிராணி பிஎம்சிக்கும் ஒரு சிறப்பு செய்தி" எனக் கேலியான தலைப்பிட்டு பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நான் எல்லைக்கு போறேன்...நீங்க ஒலிம்பிக்கு போங்க: ட்விட்டர் பிரச்னையை முடித்த கங்கனா