தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க பல்வேறு மாநில அரசுகள் தடைவிதித்தது. இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.
அந்த வகையில் கர்நாடகவில் உள்ள காவல்துறை அலுவலர் ரூபா தனது சமூக வலைதளப்பக்கத்தில், பட்டாசு வெடிப்பது இந்து மத வழக்கம் கிடையாது. இதைச் சொல்வதால் இந்து மதத்தை நான் தாக்கிப் பேசுவதாகச் சிலர் கூறுவார்கள். புராணங்களிலும் வேதங்களிலும் பட்டாசு வெடிப்பது பற்றி எந்தப் பதிவும் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஐரோப்பியர்கள் மூலமாகத்தான் இந்தியாவுக்கு பட்டாசு அறிமுகமானது என்று தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.
ரூபாவின் இந்தக் கருத்துக்கு ட்ரூ இந்தாலஜி என்ற ட்விட்டர் பக்கம் பதிலளித்தது. இந்தப் பதிவை பலரும் பதிவிட்டுவந்த நிலையில், ட்ரூ இந்தாலஜி பக்கம் முடக்கப்பட்டது. ரூபா கொடுத்த அழுத்தத்தாலேயே அந்தப் பக்கம் முடக்கப்பட்டதாகப் பலரும் சமூக வலைதளங்களில் கூறிவந்தனர்.
இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ரூபா போன்ற அலுவலர்கள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் அவருடைய அருவருப்பான நடவடிக்கைகளைப் பாருங்கள். மனத்தில் வன்மம்கொண்ட அவர் தன்னால் தர்க்கத்தில் வெற்றிபெற முடியவில்லை என்பதால் ட்ரூ இந்தாலஜி பக்கத்தை முடக்கவைத்துள்ளார்.
இட ஒதுக்கீட்டின் விளைவாக தகுதியில்லாதவர்களுக்கு அதிகாரம் கிடைக்கும்போது அவர்கள் காயங்களை ஆற்றுவதற்குப் பதிலாக காயப்படுத்திவிடுகின்றனர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
ஆனால் அவரது தகுதியின்மையால் அவருடைய விரக்தி வெளிப்படுகிறது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்" எனப் பதிவிட்டுள்ளார்.