மும்பையிலுள்ள ஜுஹு பகுதியில் மருத்துவமனைக்கு சென்றிருந்த ஜான்வி கபூர். அப்போது, பிரபலங்களை பின்தொடரும் பாப்ராஸ்சி போட்டோகிராஃபர் ஒருவர், ஜான்வியை புகைப்படம் எடுத்துக்கொண்டே பின்தொடர்ந்தார்.
தனது வேலையில் மும்முரமாக இருந்த போட்டோகிராபர், ஜான்வி சாலையை கடக்கும்போது அவரை புகைப்படம் எடுப்பதில் கவனம் முழுவதையும் செலுத்திக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வேகமாக வந்த ஆட்டோ அந்த போட்டோகிராஃபர் மீது மோத முற்பட்ட நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் சுதாரித்து கொண்ட அவர் சட்டென விலகினார்.
இதையடுத்து சற்று நிலைதடுமாறிய அவரை, ஜான்வியின் உதவியாளர் கீழே விழாமல் தாங்கிப்பிடித்தார். இதனிடையே ஆட்டோ ஓட்டுநரும் உடனடியாக பிரேக் பிடித்து வண்டியை நிறுத்தினார். இந்த சம்பவம் ஜான்வி கண்முன்னே நடைபெற்ற நிலையில், அவர் தனது வாயை மூடியபடி அதிர்ச்சியடைந்தார். பின்னர் சில விநாடிகள் உறைந்துபோய் அமைதியாக நின்றார். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து நூல் இழையில் விபத்திலிருந்து தப்பித்த போட்டோகிராஃபரிடம் காயம் ஏற்படாததை உறுதி செய்துகொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதேபோன்று, கடந்த சில வாரங்களுக்கு முன் தனது தங்கை அன்ஷுலா கபூருடன் உணவகம் சென்று சாப்பிட்டபின் வீடு திரும்பும்போது, போட்டோகிராஃபர் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டே நிலைதடுமாறி கீழே விழ நேர்ந்த நிலையில், அவரை காப்பாற்றினார் ஜான்வி.
பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாகத் திகழும் ஜான்வி கபூர் தற்போது இந்திய விமானப்படை போர் விமானி குஞ்சன் சக்சேனா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் 'தி கார்கில் வார்' படத்தில் நடித்து வருகிறார்.