சைதன்யா தம்ஹேன் இயக்கத்தில் விவேக் கோம்பர் தயாரிப்பில் உருவான படம் 'The Disciple'. மராட்டி மொழியில் உருவான இப்படம், மும்பையில் இந்திய கிளாசிக்கல் இசை பாடகர் ஒருவரை சீடர் ஒருவர் பின் தொடர்கிறார். பல ஆண்டுகளாக பாரம்பரியமாக விடா முயற்சியும் பயிற்சியால் அவரால் சிறப்பாக பாட முடிகிறதா என்பதே இப்படத்தின் கதையாக அமைந்துள்ளது.
2001ஆம் ஆண்டு கோல்டன் லயன் விருது வென்ற மீரா நாயரின் 'Monsoon Wedding' படத்திற்குப் பிறகு வெனிஸ் திரைப்பட விழாவில் 'The Disciple' படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. அதுமட்டுமல்லாது இப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் மதிப்புமிக்க FIPRESCI விருதையும் வென்றது.
விருது வென்றது குறித்து தம்ஹானே கூறுகையில், FIPRESCI விருது எங்களுக்கு ஒரு சிறப்பு மரியாதை. விழாவின் ஜூரி, உறுப்பினர்கள் எங்களுக்கு அளித்த ஆதரவுக்கு இதயப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதுக்கான நடுவர்கள் திரைப்பட விமர்சகர்கள், உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்களுமே. 'The Disciple' பயணத்தில் இந்த அருமையான தொடக்கம் எங்கள் அனைவரையும் மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் விவேக் கோம்பர் கூறுகையில், வெனிஸ் திரைப்பட விழாவில் இந்த மதிப்புமிக்க விருதை 30 ஆண்டுகளுக்குப் பிறகு வென்ற இந்திய திரைப்படமாக 'The Disciple' இருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. இந்த விருது எங்களுக்கு மிகவும் நம்பிக்கையை ஊக்கத்தையும் அளித்துள்ளது என்றார்.
வெனிஸ் திரைப்பட விழாவின் மதிப்புமிக்க இந்த விருதை வென்ற கடைசி இந்திய படம் 1990இல் அடூர் கோபாலகிருஷ்ணனின் 'மதிலுகல்' (Mathilukal).
திரைப்பட விமர்சகர்களின் சர்வதேச கூட்டமைப்பு (பிரெஞ்சு மொழியில், ஃபெடரேஷன் இன்டர்நேஷனல் டி லா பிரஸ் சினேமடோகிராஃபிக் FIPRESCI) வழங்கிய இந்த விருது, திரைப்பட கலாசாரத்தை மேம்படுத்துவதையும் தொழில்முறை நலன்களை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1930ஆம் ஆண்டில் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில், தொழில்முறை திரைப்பட விமர்சகர்கள், உலகெங்கிலும் உள்ள திரைப்பட பத்திரிகையாளர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது, இது உலகளவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் உறுப்பினர்களை கொண்டுள்ளது. சமீபத்தில் அப்பாஸ் கியரோஸ்டாமி, பால் தாமஸ் ஆண்டர்சன், ஜோசுவா ஓப்பன்ஹைமர், ஜார்ஜ் குளூனி ஆகியோரின் படைப்புகளுக்கு ஃபிப்ரெஸ்கி (FIPRESCI) விருது வழங்கப்பட்டுள்ளது.