இந்த வருட ஆரம்பத்தில் ரன்வீர் சிங், அலியா பட், சித்தாந்த் சதுர்வேதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ’கல்லி பாய்’ திரைப்படம் அனைத்துத் தரப்பு விமர்சகர்களின் பாராட்டுக்களைக் குவித்ததோடும் மட்டுமல்லாமல் வணிகரீதியாகவும் பெரும் வெற்றிபெற்றது. தொடர்ந்து இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருதுகளின் சிறந்த அயல்நாட்டுப் படங்களுக்கான பிரிவில், இந்தியாவின் சார்பாக இப்படம் பரிந்துரை செய்யப்பட்டது.
வெளியானது முதல் பல்வேறு விருதுகளைக் குவித்து வந்த இந்தத் திரைப்படம், தற்போது மேலும் ஒரு மைல்கல்லாக #ThisHappened 2019 எனும் ட்விட்டர் பட்டியலில் இணைந்துள்ளது. இதன்மூலம் 2019ஆம் ஆண்டில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட இந்தி திரைப்படம் எனும் சாதனையைப் படைத்துள்ளது.
மும்பை தாராவியின் புகழ்பெற்ற ரேப்பர்களான (Rap) நவேத் ஷைக், விவியன் ஃபெர்னாண்டஸ் ஆகியோரின் போராட்டங்கள் நிறைந்த இசைப்பயணத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை ஜோயா அக்தர் இயக்கியிருந்தார். கர்ஷ் கேலின் இசை, படத்திற்கு மேலும் பக்கபலமாய் அமைந்து இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு ரசிகர்களிடையேயும் இப்படத்தைக் கொண்டு சேர்த்தது.
கல்லி பாய் தவிர்த்து இந்தப் பட்டியலில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் திரைப்படம் இரண்டாவது இடத்தையும் மிஷன் மங்கள், கேசரி, ஹவுஸ் ஃபுல் 4, உரி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன”
இதையும் படிங்க: போலாந்தில் அமிதாப்புக்கு கிடைத்த கெளரவம்!