ஷங்கரின் 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறியவர் நடிகை ஜெனிலியா. நடிகர் விஜயுடன் 'சச்சின்', 'வேலாயுதம்', ஜெயம் ரவியுடன் 'சந்தோஷ் சுப்ரமணியம்', தனுஷுடன் 'உத்தம புத்திரன்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெனிலியா மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும் பிரபல பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ரியான், ரேய்ல் என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவந்த ஜெனிலியா நடிப்பில் தமிழில் கடைசியாக 'வேலாயுதம்' படம் வெளியாகியிருந்தது. அதன் பின்னர் சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
தமிழில் பெரும்பாலும் சுட்டித்தனமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த ஜெனிலியா தற்போது முழு நேர குடும்பத் தலைவியாகவே இருந்துவருகிறார்.
மலையாளத்தில் வெளியான 'நிறம்' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான 'துஜே மேரி கசம்' படத்தில் ஜெனிலியாவும், அவருக்கு ஜோடியாக நடிகரும் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக்கும் அறிமுகமாகினர். இந்த படத்திற்கு பின் இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினர்.
இந்த நிலையில், ஜெனிலியாவும் ரித்தேஷ் தேஷ்முக்கும் இணையத்தில் ஒளிப்பரப்பபடும் லேடிஸ் vs ஜென்டில்மேன் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.
இந்த நிகழ்ச்சியானது கருத்துக்கள், வாதங்கள், இரு பாலினங்களுக்கிடையிலான உடன்பாடுகளை விவாதிக்கும் நிகழ்ச்சியாகும்.
இதுகுறித்து ஜெனிலியா கூறுகையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு ரித்தேஷுடன் மீண்டும் இணைந்து தொகுத்து வழங்குவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் கூறும் கருத்துகள் நிச்சயம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்று கூறினார்.