மும்பையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஜூன் மாதம் 14ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் தொடர்பான வழக்கில் போதைப்பொருள் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) விசாரணை நடத்தியது. இந்த வழக்கு தொடர்பாக என்.சி.பி. மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில, நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக், அப்துல் பாசித் பரிஹார், ஜைத் விலாட்ரா, திபேஷ் சாவந்த், சாமுவேல் மிராண்டா உள்ளிட்ட 23 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாலிவுட் பிரபலங்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதன் அடிப்படையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷின் வீட்டை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக அலுவலர்கள் கடந்த மாதம் திடீர் சோதனையிட்டனர்.
அப்போது அவரது வீட்டில் இருந்து ஏறத்தாழ 1.8 கிராம் எடையுள்ள ஹஷிஷ் (போதைப்பொருள் வகைகளுள் ஒன்று) கண்டெடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது 2017ஆம் ஆண்டு, தீபிகாவும் அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பற்றி வாட்ஸ்அப்பில் உரையாடியதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
அதனையடுத்து கரிஷ்மாவுக்கும், தீபிகாவிற்கும் சம்மன் அனுப்பி கடந்த மாதம் விசாரணை மேற்கெண்டனர்.
அக்டோபர் 27ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரச்சொல்லி கரிஷ்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அன்று கரிஷ்மா வரவில்லை. விசாரணைக்கு வராதது குறித்து கரிஷ்மா அலுவலர்களுக்கு இதுவரை விளக்கமோ தகவலோ அளிக்கவில்லை.
இந்நிலையில், கரிஷ்மா எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். கரிஷ்மா பணியாற்றும் க்வான் நிறுவனத்தின் ஊழியர்களிடம் விசாரணை நடத்த அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தன் வீட்டில் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரிஷ்மா முன் ஜாமீன் கோரியுள்ளார்.
இந்த வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்ட்ட தீபிகா, ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் உள்ளிட்டோரின் மொபைல்களையும் பறிமுதல் செய்யது தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.