மும்பை: ஹோலி பண்டிகையை மற்றவர்கள்போல் எனக்கு கொண்டாடப் பிடிக்காது என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார்.
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலி பண்டிகை வடஇந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. வண்ணங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் ஹோலி பண்டிகையை மற்றவர்களைப் போல் பெரிதாக கொண்டாடுவதில் தனக்கு விருப்பமில்லை என்று தீபிகா படுகோனே கூறியுள்ளார். இதற்கு காரணமாக தனது வாழ்வில் நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றையும் நினைவுபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
மும்பைக்கு நான் குடிபெயர்வதற்கு முன்பு இங்கு நான் மாடலிங் செய்துகொண்டிருந்தேன். பிரபல சோப் நிறுவனத்தின் விளம்பரத்துக்கான ஆடிஷனில் எனது தாயுடன் பங்கேற்பதற்கு இங்கு வந்தேன். காலையில் ஆடிஷனை முடித்துவிட்டு பேட்டார் சாலையில் வசித்து வரும் எனது தாத்தாவை பார்க்க முடிவு செய்தேன்.
புறநகர் பகுதியிலிருந்து காரில் எனது அம்மாவுடன் தாத்தா வீட்டுக்கு சென்றேன். அவர் வீட்டருகே சென்றதும், இன்று ஹோலி பண்டிகை என்பதால் சாலையில் இறங்கி செல்லாமல், காரிலேயே வீட்டுக்கு அருகே செல்லலாம் என்றார். ஆனால் நான் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லையென்று சொல்லி நடக்க வைத்தேன்.
அப்போது சாலையை கடக்கும்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பகுதியில் வந்த சிறுவர்கள் சிலர் எங்கள் மீது முட்டையை வீசினர். அப்போது என் தாயை முட்டை தாக்கியது. இதனால் அவர் அணிந்திருந்த ஆடை முழுவதும் முட்டைக் கரையால் சேதமானது. பகல் நேரம் என்பதால் அப்போது மாற்றுத்துணி கூட எடுத்தவரவில்லை.
இதைக்கண்ட என் தாய், ''உன்னை குறிவைத்து அவர்கள் வீசினார்கள். தவறுதலாக என் மீது விழுந்தது" என்று புலம்பினார். இது எனக்கு மறக்க முடியாத சம்பவமாக மட்டுமில்லாமல், சங்கடத்தை ஏற்படுத்தும் ஹோலி பண்டிகையாகவும் அமைந்தது. என்னால் இப்படியொரு அசெளகரியம் சம்பவம் நடந்ததற்கு எனது தாய் என்னை மன்னிக்கவில்லை. ஆனால் ஹோலி கொண்டாட்டம் இப்படித்தான் இருக்கும்.
இந்தக் கதையை சொல்வதால் என தாய் வருத்தம் அடையலாம். ஆனால் ஹோலி மீது ஈர்ப்பு குறைந்ததன் காரணத்தை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.