ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் படங்களை தொடர்ந்து தீபிகா - சஞ்சய் லீலா பன்சாலி மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு மிகவும் பிடித்தமானவர் தீபிகா படுகோன். அவருடன் அதிகமான படங்களில் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில், இவர்கள் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சஞ்சய் லீலா பன்சாலியை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்தார் தீபிகா. அப்போது அடுத்த படத்துக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது. தற்போது தனது ’ஹீரா மண்டி’ தொடருக்கான கதாபாத்திர தேர்வு பணிகளில் சஞ்சய் ஈடுபட்டு வருகிறார். இதில் நடிக்க சோனாக்ஷி சின்ஹா, ஹுமா குரேசி ஆகியோர் முன்பே தேர்வு செய்யப்பட்டிருந்தனர். பாலியல் தொழில் நடக்கும் பகுதியை மையமாக வைத்து இத்தொடர் உருவாகவுள்ளது.
இந்தத் தொடர் முடிந்து, அடுத்த படத்தை தீபிகாவுடன் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபிகா - சஞ்சய் கூட்டணியில் உருவான அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநாடு படக்குழுவினருக்கு அன்புப் பரிசு கொடுத்த சிம்பு