கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், காவல் நிலையம் செல்வதற்காக அங்கலக்குறிச்சியில் இருந்து கோட்டூர் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். கோட்டூர் வள்ளியம்மாள் தியேட்டர் அருகே வந்த போது, எதிரே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், சிறப்பு உதவி ஆய்வாளர் வாகனத்தின் மீது மோதியதில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இருவரையும் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் பொழுது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. எதிரே வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மீது மோதியவர் அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த சிவக்குமார் என்பது தெரிய வந்தது.
இதையும் படிங்க: தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த இளைஞர்! தொழிற்சாலையினர் பேச்சுவார்த்தை!
சிவக்குமார், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கோட்டூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணி பணிக்குச் செல்லும் பொழுது சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன், அவரது வீட்டுக்குச் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, தமிழக முதலமைச்சர் அறிவித்த ரூபாய் 25 லட்சம் காசோலையை, ஆனைமலை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீமதி, உதவி ஆய்வாளர் வீட்டுக்குச் சென்று குடும்பத்தாரிடம் வழங்கினார். அப்போது ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் தாமோதரன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.