தூத்துக்குடி: தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில், செக்காரக்குடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரைச் சேர்ந்த சிலர், இரண்டாம் உலகப்போரின்போது ராணுவத்தில் சேர்ந்தனர். அதுவே, நாடு விடுதலை அடைந்த பின் இந்திய ராணுவத்தில் சேர்வதாகத் தொடர்ந்தது.
ராணுவ கிராமம்: கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் குறைந்தது ஒரு ராணுவ வீரர் இருக்கிறார். சில குடும்பங்களில் தாத்தா, தந்தை, மகன் என தலைமுறை தலைமுறையாக வாரிசுகளை ராணுவத்திற்கு அனுப்பி வருகின்றனர். சில வீடுகளில் ஓரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது இக்கிராமத்தில் வீட்டுக்கு ஒருவர் என 2,000க்கும் மேற்பட்டோர் ராணுவம், கடற்படை, தமிழ்நாடு காவல்துறை உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகின்றனர். மேலும், இங்கு இருப்பவர்களில் 3,000க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் படை வீரர்கள் ஆவர். இக்கிராமத்தைப் பொறுத்தவரை பிறக்கும் ஆண் குழந்தைகளை படை வீரர்களாக்க முயல்வது, பிறக்கும் பெண் குழந்தைகளைப் படை வீரர்களுக்கு திருமணம் செய்து வைப்பது ஆகியவற்றை ஒரு வழக்கமாகவே கொண்டு வாழ்ந்து வருவதாகக் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஆர்ப்பரிக்கும் அமரன்.. படக்குழுவினரை நேரில் பாராட்டிய ரஜினிகாந்த்!
அமரன் திரைப்படம்: இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று முன்தினம் உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படம் ரியல் லைஃப் ஹீரோ ’மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.
ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதால், செக்காரக்குடி கிராமத்தைச் சேர்ந்த பலரும் இதனை குடும்பமாகச் சென்று பார்த்து வருகின்றனர். இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் நாயக் அக்கினி முத்து நம்முடன் பேசுகையில், தான் தீபாவளி விடுமுறைக்காக வந்திருப்பதாகவும், தனது குடும்பத்துடன் சென்று திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்து வந்ததாக குறிப்பிடுகிறார். எல்லையில் பணியில் இருக்கும் போது தாங்கள் சந்திக்கும் சவால்களை குடும்பத்தினரிடமும், குழந்தைகளிடமும் சொன்னால் புரியாது என கூறிய அக்கினிமுத்து, இத்திரைப்படத்தின் மூலம் தங்கள் குழந்தைகள் எளிதாக புரிந்து கொண்டனர் என கூறுகிறார்.
கிழக்கு பாகிஸ்தான் போரின் போது ராணுவத்தில் பணியாற்றிய சோமசுந்தர பெருமாளிடம் பேசுகையில் தமது பணிக்காலத்தில் எதிர் கொண்ட சவால்கள் குறித்து பேசினார். தனக்கு திருமணம் ஆகி இரண்டே மாதத்தில் ராணுவ பணிக்காக போக நேர்ந்ததாகக் கூறிய அவர், போர்க்காலங்களில் உயிரிழந்தாலும் உறவினர்களுக்கு தெரிய வர மாதக்கணக்கில் ஆகும் என கூறினார். போரில் இலக்கை நோக்கி முன்னேறும் போது, உடன் இருப்பவர் செத்து விழுந்தாலும இலக்கை நோக்கி முன்னேறுவதுதான் குறியாக இருக்குமே தவிர வேறு ஏதும் செய்ய முடியாது என கூறினார். மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை திரைப்படமாக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், இதே போன்று மற்ற ராணுவ வீரர்களின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக்கப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
யார் முகுந்த் வரதராஜன்: சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் அமரன் திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவியதாகும். முகுந்த் மற்றும் அவரது மனைவி இந்து ஆகியோரின் காதலில் தொடங்கி, அவரின் வீரதீர செயல்களை விளக்கும் வகையில் இந்த திரைப்படம் அமைந்துள்ளது. மறைவுக்குப் பின்னதாக இந்திய அரசால் அசோக் சக்ரா விருது கொடுத்து முகுந்த் வரதராஜன் கவுரவிக்கப்பட்டார்.
2014 ஏப்ரல் 25ம் தேதி ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் மக்கள் வசிப்பிடத்தில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகளை பிடிக்கும் பணிக்கு முகுந்த் வரதராஜன் பொறுப்பேற்றிருந்தார். ஆபத்தானது என தெரிந்தும் மிக நெருக்கமாக நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதே சண்டையில் படுகாயமடைந்திருந்த முகுந்த் வரதராஜனும் பின்னர் மரணமடைந்தார்.