தீபிகா படுகோனே நடிப்பில் 'சப்பாக்' திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆசிட் வீச்சு பாதிப்புக்குள்ளாகி இன்று பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்துவரும் லக்ஷ்மி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு பல்வேறு மாநில அரசுகளும் வரிச்சலுகை அளித்துள்ளன. இந்த நிலையில், பஞ்சாப் மாநில சமூக பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் இப்படத்திற்கான சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஆசிட் வீச்சு பாதிப்புக்கு ஆளானவர்களுக்காக நாளை அம்மாநில அமைச்சர் அருணா சவுதரியின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்புக் காட்சி திரையிடப்படவுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரில் உள்ள ஐநாக்ஸ் தில்லான் பிளாசா திரையரங்கில் நாளை காலை 11.30 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது.
இதுகுறித்து பேசிய அம்மாநில அரசின் சமூக பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத் துறை செய்தித் தொடர்பாளர், 'அரசின் இந்த முயற்சி பெண்கள் பாதுகாப்புக்காகவும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நமது கடமை. பஞ்சாப் அரசு ஆசிட் வீச்சு பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு மாதம்தோறும் 8 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துவருகிறது' என தெரிவித்தார்.