திருவனந்தபுரம்: ஜேஎன்யூ மாணவர்கள் கிளர்ச்சியை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வர்த்தமானம்’ திரைப்படத்துக்கு தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது.
சித்தார்த்த சிவா இயக்கத்தில் பார்வதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள படம் ‘வர்த்தமானம்’. கேரள பெண் ஒருவர் தனது ஆராய்ச்சி படிப்பு தொடர்பாக ஜேஎன்யூ செல்வது போலவும், அங்கு நடைபெறும் மாணவர்கள் கிளர்ச்சியில் பங்கேற்பது போலவும் இதன் கதை நகர்கிறது.
எந்தவித காரணமும் சொல்லாமல் இந்த படத்தை தணிக்கைக் குழு தடை செய்துள்ளது. இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதி தயாரித்திருப்பவர் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆர்யதான் சௌகத். இதனால்தான் தணிக்கைக் குழு பிரச்னை செய்வதாக கூறப்படுகிறது.
மத்திய திரைப்பட தணிக்கை குழுவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சந்தீப் குமார் பாஜகவை சேர்ந்தவர். இவர்தான் இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்படுத்துவதாக தெரிகிறது என ஆர்யதான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர்யதான் தனது பேஸ்புக் பக்கத்தில், மாணவர்கள் போராட்டம் குறித்து படம் எடுப்பது இந்த நாட்டில் தேசவிரோத செயலாக பார்க்கப்படுகிறது. பண்பாட்டு துறை மீது நிகழும் இந்த வன்முறையை சகித்துக்கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார்.