ஹெச். வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இப்படம் விமர்சன ரீதியிலும் வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து அஜித் - ஹெச். வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் 'வலிமை' படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார்.
'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கரோனா தொற்றின் அச்சம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போனி கபூர் மும்பையில் இருக்கும் தனது வீட்டில் இருக்கிறார். இவர் வீட்டில் பணிசெய்யும் நபர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாகவும், இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போனி கபூர் தரப்பில் வெளியான அறிக்கையில், "போனி கபூர் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த 23 வயது நபர் ஒருவர் சமீபத்தில் உடல் நலமின்றி இருந்ததையடுத்து, அவருக்கு உடனடியாகக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார். மும்பை மாநகராட்சி அலுவலர்கள் அவருக்குத் தேவையான ஆலோசனையை வழங்கி வருகின்றனர்.
மேலும் போனி கபூர், அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. எனினும், போனி கபூர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார். கரோனா பாதிப்புக்குள்ளான நபர் விரைவில் குணமடைவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.