இண்டோர்: இந்து கடவுளை கொச்சைப்படுத்துவதாக ‘தாண்டவ்’ வெப் சீரிஸுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பாஜகவினர் தாண்டவ் போஸ்டர்களை தீயிட்டுக் கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘தாண்டவ்’ வெப் சீரிஸ், இந்து கடவுளை தவறாக சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து பாஜக பட்டியலினப் பிரிவு தலைவர் ராஜேஷ் ஷிரோத்கர், சமீபத்தில் வெளியாகியுள்ள ‘தாண்டவ்’ வெப் சீரிஸில், சிவன் வேடமேற்று நடித்திருப்பவர் கொச்சையான சொற்களை பயன்படுத்துவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இந்து கடவுளை கொச்சைப்படுத்துவது மட்டுமில்லாமல், இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் விஷயமாகும். எனவே இது தொடர்பாக புகாரளித்துள்ளோம் என தெரிவித்தார்.
இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, புதிதாக வெளியாகியுள்ள ‘தாண்டவ்’ வெப் சீரிஸ் இந்துக்கள் நம்பிக்கையை புண்படுத்துவதாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த குறிப்பிட்ட காட்சியை சென்சாருக்கு அனுப்பி நீக்குவதே சரியான நடவடிக்கையாக இருக்கும். அப்படி செய்தால்தான் நமது நாட்டின் அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் காக்கப்படும் என்றார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த சர்ச்சை தொடர்பாக அமேசான் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.