பாலிவுட்டின் வளர்ந்துவரும் நாயகன் ஆயுஷ்மான் குர்ரானா. இவர் வித்தியாசமான கதையம்சங்கள் கொண்ட திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில் அவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'சுப் மங்கல் ஸியதா சவ்தன்' திரைப்படம் அமேசான் பிரைமில் இன்று வெளியானது. ஒருபாலின காதல் குறித்தான இந்தப் படம் வெளியானபோது கலப்படமான விமர்சனங்களைப் பெற்றது.
இந்தத் திரைப்படம் அமேசானில் வெளியானதைத் தொடர்ந்து படம் குறித்தான தனது கருத்தினை ஆயுஷ்மான் பகிர்ந்துகொண்டார். அப்போது, "இந்தத் திரைப்படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். ஒருபாலின காதல் குற்றமில்லை என்று கூறப்பட்டு சில காலமே ஆகியுள்ளது.
இந்தச் சமூகம் அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக நாம் வெகு தூரம் செல்ல வேண்டும். 'சுப் மங்கல் ஸியதா சவ்தன்' போன்றதொரு திரைப்படம், இந்தியாவில் இருக்கும் தன்பாலின ஈர்ப்பின் யதார்த்தத்தை மெல்லியதாகக் காண்பித்ததோடு மட்டுமில்லாமல் இதுபோன்ற வழக்கத்திற்கு மாறான திரைப்படங்களை முன்னிலைக்கு எடுத்துவருவதிலும் ஒரு முயற்சியைச் செய்துள்ளது. அந்த வகையில் கலையும், சினிமாவும் மக்களின் மனநிலையில் மாற்றங்கள் கொண்டுவரும் என்பதே என் கருத்தாகும்" என்றார்.
இந்தத் திரைப்படம் ஹித்தேஷ் கேவால்யா இயக்கத்தில், ஆயுஷ்மான் குர்ரானா, ஜித்தேந்திர குமார் நடிப்பில் வெளிவந்தது.
இதையும் படிங்க... ரயிலில் பாட்டுப் பாடி பணம் சம்பாதித்த 'விக்கி டோனர்'