மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் கடைசியாக உருவான படம் 'தில் பெச்சாரா'. முகேஷ் சப்ரா இயக்கியுள்ள இப்படம் 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்னும் பிரபல ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் சுஷாந்த் சிங்குக்கு ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 24ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
சுஷாந்த் சிங்கின் மறைவையொட்டி இத்திரைப்படம் ஹாட் ஸ்டார் தளத்தில், இலவசமாகக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் ஜூலை ஆறாம் தேதி மாலை வெளியானது.
ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். தற்போது வரை இந்த ட்ரெய்லரை நான்கு கோடிக்கும் மேலானோர் பார்த்துள்ளனர். அதுமட்டுமல்லாது 80 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.
இந்த ட்ரெய்லர் உலக அளவில் பலராலும் விரும்பப்பட்ட ட்ரெய்லர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுதொடர்பாக படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில், சுஷாந்த் மற்றும் 'தில் பெச்சாரா' படத்தின் மீதான அன்பு மழை பொழிகிறது என்று பதிவிட்டுள்ளார்.