இந்தியாவில் கரோனா வைரஸின் இரண்டாவது அலை கொடூரமாக தாக்கிவருகிறது. நாள்தோறும் அதிகளவில் பாதிக்கப்பட்டும் இறந்தும் வருகின்றனர். இந்தியா படும் சிரமங்களை பார்த்து பல்வேறு நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. மேலும் பல பிரபலங்களும் தொண்டு நிறுவனங்களும் கரோனா நிவாரண நிதியை வழங்குகின்றன.
அந்த வகையில், கெட்டோ எனும் சமூக வலைதளத்தின் மூலம் #InThisTogether என்ற நிதிதிரட்டும் திட்டத்தை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் தொடங்கியுள்ளனர். கரோனா நிவாரண நிதியாக ரூ.7 கோடி திரட்ட முடிவு செய்தனர். அதில் முதல்கட்டமாக தங்கள் பங்களிப்பாக ரூ. 2 கோடியை வழங்கியுள்ளனர். இந்நிலையில், ரூ. 11 கோடியை நிவாரண நிதியாக திரட்ட நட்சத்திர தம்பதி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "இந்தியாவில் நிலவிவரும் கரோனா தொற்று நோயை எதிர்த்து போராட நீங்கள் அளித்த ரூ. 5 கோடி எங்கள் முயற்சிகளை வலுப்படுத்தியுள்ளது. அதற்காக நாங்கள் நன்றி கூறிகிறோம். தற்போது இந்த நிவாரண நிதியானது ரூ. 11 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது" என்றனர்.