டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆசியர்கள் பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு முகமூடி அணிந்து ஊடுருவிய அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மாணவர்கள், பேராசிரியர்களைச் சரமாரியாகத் தாக்கினர்.
இரும்புக் கம்பிகள், கம்புகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆதரவாகவும், குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர்.
இதனிடையே இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது. இந்தியா கேட் பகுதியில் மாணவர்கள் நேற்று விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவைத் தெரிவித்துவரும் நிலையில், பாலிவுட் பிரபலங்களான அனுராக் காஷ்யாப், ரிச்சா சத்தா, சோயா அக்தர், விஷால் பரத்வாஜ், டாப்சி, விஷால் தத்லானி உள்ளிட்ட பலர் மாணவர்களுடன் இணைந்து மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து பேசிய நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யாப், "மாணவர்களின் போராட்டத்தைக் கண்டு அவர்களுடன் இணைந்து ஆதரவு தெரிவித்தேன். குற்றவாளிகள் அரசுக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் அவர்களைக் கைதுசெய்ய அரசு விரும்பாது. மாணவர்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது அதனைத் தடுக்க காவல் துறை முயற்சிக்கவில்லை, ஆனால் ஜாமியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த மாணவர்களை அடித்து விரட்டியது" என்று தெரிவித்தார்.