அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மைதான்'. அமித் ரவீந்திரநாத் இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ புரோஜக்ட்ஸ், ஃப்ரெஷ் லைம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சயத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகி வரும் இப்படத்தில், சயத் அப்துல் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். இதில், அஜய் தேவ்கனுடன் இணைந்து பிரியாமணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.
கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி பலமுறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இறுதியாக மைதான் திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், மைதான் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.
இந்த தகவலுக்கு படத்தயாரிப்பாளர்களான போனி கபூர், ஆகாஷ் சாவ்லா, அருணவா ஜாய் செங்குப்தா ஆகிய மூவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், " 'மைதான்' படத்தை ஓடிடியில் வெளியிட எந்தவொரு நிறுவனத்துடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
தற்போது படக்குழுவினர் அனைவரது பாதுகாப்பையும் கருத்தில் கொண்டும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றியும் 'மைதான்' படத்தை விரைவில் முடிப்பது மட்டுமே எங்களுடையே ஒரே நோக்கம். 'மைதான்' படம் குறித்து வரும் எந்தவொரு தகவலையும் நம்ப வேண்டாம் என உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.
இந்திய கால்பந்து அணியை 1951-1962 காலகட்டத்தில் உலக அரங்குக்கு கொண்டுச் செல்ல அயராது பாடுபட்ட சயத் அப்துல், இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். ஆசிரியராக இருந்து கால்பந்து பயிற்சியாளராக தனது பணியை திறம்படச் செய்த சயத் அப்துல், 1956ஆம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் அரையிறுதி வரை போராடி இந்திய அணி அதிகபட்ச சாதனை படைக்க முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர்.