பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் நடிப்பில் 'தனாஜி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்துள்ளது. சுமார் 300 கோடிக்கும் மேல் வசூலித்து இந்த ஆண்டின் முதல் பாலிவுட் பிளாக் பஸ்டர் என்ற பெருமையுடன் பாக்ஸ் ஆபிஸில் முத்திரை பதித்துள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது அஜய் தேவ்கான் தற்போது 'மைதான்' படத்தில் நடித்துவருகிறார். கால்பந்து பயிற்சியாளர் சயத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தில் சயத் அப்துல் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் ஆசிரியராகவும், பயிற்சியாளராகவும் நடிக்கிறார்.
1951-1962 காலகட்டத்தில் இந்தியாவின் கால்பந்து விளையாட்டை உலக அரங்குக்கு கொண்டுசெல்ல அயராது பாடுபட்ட சயத் அப்துல், இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராகப் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
ஆசிரியராக இருந்து கால்பந்து பயிற்சியாளராக தனது பணியை திறம்படச் செய்த இவர், 1956ஆம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் அரையிறுதி வரை போராடி இந்திய அணி அதிகபட்ச சாதனைப் படைக்க முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவராவார்.
இவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தற்போது அஜய் தேவ்கான், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அமித் ரவீந்திரநாத் இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூரின் பே வியூ புரோஜக்ட்ஸ், ஃப்ரெஷ் லைம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவாகிவரும் இந்தப் படத்தை இந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
இதனிடையே தற்போது அஜய் தேவ்கானின் முதல் தோற்றங்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் போஸ்டரில் கால்பந்தை எட்டி உதைப்பது போன்றும் மற்றொன்றில் கால்பந்து அணிக்கு தலைமை தாங்கும் பயிற்சியாளரைப் பிரதிபலிப்பது போன்றும் அமைக்கப்பட்டுள்ளன.