'பாஸிகர் ஓ பாஸிகர் து ஹே படா ஜாதுகர்... ' 90 களின் தூர்தர்ஷன் காலத்தில் பரவலாக ஒலித்த இந்தப் பாடலையும், இளம் வயது ஷாருக்கானுடன் துள்ளிக் குதித்து கியூட்டாக ஆடும் கஜோலையும் அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிட முடியாது!
காந்தக் கண்ணழகி
சினிமா பின்னணியில் இருந்து வந்தவர் என்றாலும் கஜோல் தன் துறுதுறு நடிப்பாலும், பேசும் கண்களாலும் பாலிவுட் தாண்டி நாடு முழுவதும் கவனம் ஈர்த்தார்.
ஷாருக் - கஜோல் ஜோடி
'பாசிகர்' படத்தின் மூலம் ஷாருக்கானுடன் இணைந்து முதல் பிளாக் பாஸ்டர் வெற்றியை பதிவு செய்தார் கஜோல். தொடர்ந்து, மராத்தி மந்திரில் ஆண்டுக்கணக்காய் ஒளிபரப்பப்பட்டு குடும்பங்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் காதல் கதையான 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயிங்கே' படத்தை இதே ஜோடி கொடுத்தது.
அப்படத்தில் கஜோல் ஏற்று நடித்த சிம்ரன் கதாபாத்திரமும், வசனங்களும் இன்றும் இணையத்தையும் மீம்ஸ்களையும் ஆக்கிரமித்துள்ளன
'குச் குச் ஹோதா ஹே', 'கபி குஷி கபி கம்' என தொடர்ந்து ஷாருக்கான் - கரண் ஜோஹர் - கஜோல் கூட்டணியில் அமைந்த வெற்றிப் படங்கள் இன்றைக்கும் என்றைக்குமான பீல் குட் படங்கள்.
'மின்சாரக் கனவு' கஜோல்
பாலிவுட்டிலிருந்து கஜோலை அப்படியே கடத்தி வந்து 'மின்சாரக் கனவு' படம் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார் ராஜீவ் மேனன். 'வெண்ணிலவே வெண்ணிலவே', 'தங்கத் தாமரை மகளே' பாடல்களின் இசையை காதுகள் ரசித்தாலும், கண்கள் கஜோலை தான் என்றும் காண விரும்பும்.
அஜய் தேவ்கனுடன் திருமணம்
நிஜ வாழ்விலும் துறு துறு பெண்ணாக வளைய வரும் கஜோல், அமைதியின் உருவமேயான நடிகர் அஜய் தேவ்கனை காதல் திருமணம் செய்தார். பாலிவுட்டின் சர்ப்ரைஸ் ஜோடியாக இன்றும் இவர்கள் கொண்டாடப்பட்டு வருகிறார்கள்.
கம் பேக்
2001ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுத்தார் கஜோல். தன் முதல் குழந்தையை பெற்றெடுத்த கஜோல், கர்ப்ப காலத்தில் எடைக்கூடியதால் பெரும் கேலிக்கு உள்படுத்தப்பட்டார்.
ஆனால், 2006ஆம் ஆண்டு அமீர் கானுடன் 'ஃபனா' படத்தில் மேலும் இளமையான கஜோலாக கம் பேக் கொடுத்து ஒட்டுமொத்த திரையுலகையும் வாயடைக்கச் செய்தார்.
கண் தெரியாத பெண்ணாக 'சுபானல்லா...' பாடலில் வளையவரும் கஜோலை ரசிக்காதவர்கள் நிச்சயம் இருக்க முடியாது.
தொடர்ந்து தன் கணவர் அஜய் தேவ்கனுடனும், முன்னணி நடிகர்களுடனும் தேர்ந்தெடுத்த காதபாத்திரங்களில் நடித்து வரும் கஜோல், திரைக்கு பின்னால் சமூக ஆர்வரலாகவும் இயங்கி வருகிறார்.
தாய்மையை விரும்பியேற்று தன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வரும் கஜோல், கணவரை இழந்த பெண்கள், குழந்தைகளுக்கான இயக்கங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
இன்று (ஆக.05) தன் 47ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கும் கஜோல், இதேபோல் என்றும் இளமையாக ஜொலிக்க ஈடிவி பாரத் சார்பாக வாழ்த்துகள்.
இதையும் படிங்க: HBD ரித்விகா: தனித்துவ நடிப்பால் கோலிவுட்டில் கவனம் ஈர்த்த 'மெட்ராஸ்'காரி!