1994-ம் ஆண்டு ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் டாம் ஹாங்ஸ் நடிப்பில் வெளியான ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படம் உலகளவில் எண்ணற்ற ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்றது. இன்றளவும் இப்படத்தின் காட்சி மற்றும் வசனங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் ஹாலிவுட்டின் மிகச்சிறந்த படம் என்ற பெயரையும் பெற்றது.
ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை தழுவல், சிறந்த கிராஃபிக்ஸ், சிறந்த படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கான் தனது 54 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்குபல்வேறு நடிகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எனவே, தனது பிறந்தநாளான இன்று தான் அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. பிரமாண்ட பொருட்செலவில் உருவான இப்படம் ரசிகர்கள் மனதை கவராததால் தோல்வியை தழுவியது.
டாம் ஹாங்ஸ் நடிப்பில் வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' எனும் ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் ஆமிர்கான் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளன. 'லால் சிங் சதா' என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை ஆட்வைத் சந்தன் இயக்குகிறார். ஆட்வைத் சந்தன் சீக்ரட் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கியுள்ளார். மேலும், வைகோம் 18 ஆமிர் கான் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாக இருக்கிறது.
'லால் சிங் சதா'-வின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் படப்பிடிப்புக்கு 6 மாதங்களுக்கு முன்பே ஆமிர் தயாராக இருப்பார் என படக்குழு தெரிவித்துள்ளது.