ஆமிர் கான் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான 'தங்கல்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் சாதனைபுரிந்தது. இப்படம் இந்தியா மட்டுமல்லாது சீனாவிலும் பெரும் வசூல் சாதனையை ஈட்டியுள்ளது.
நிதீஷ் திவாரியின் இயக்கத்தில், மல்யுத்தத்திற்குத் தனது இரு மகள்களை இந்தியாவுக்காக விளையாடத் தயார்ப்படுத்தும் தகப்பனின் கதையை மையமாக வைத்து 'தங்கல்' திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் ஆமிர்கானின் மகள்களில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகை சன்யா மல்ஹோத்ரா.
கதைகள் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆமிர்கானை பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் 'மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட்' என அழைத்துவருகின்றனர். இது குறித்து ஆமிர்கான் ஒருமுறை கூறுகையில், "எனக்கு மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் சரியானது அல்ல. நான் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன். ஆகவே எனக்கு 'மிஸ்டர் பெஸினேட்' (Mr. Passionate) என்பதே சரியாக இருக்கும்" என்று கூறியிருந்தார்.
தற்போது இதே கருத்தையே நடிகை சன்யா மல்ஹோத்ரா சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து அவர், "ஆமிர்கானை 'மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட்' என்று அழைப்பது சரியானது அல்ல; அவர் எளிதில் உணர்ச்சிவசப்படுவர்.
அவரை 'மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட்' என அழைத்தால் அதற்கான அர்த்தம் மாறும். எனவே அவரை நாம் மிஸ்டர் பெஸினேட்' (Mr. Passionate) என்று அழைப்பதே சரியானது ஆகும்" எனக் கூறியுள்ளார்.