அத்வைத் சந்தன் இயக்கத்தில் ஆமீர் கான், கரீனா கபூர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சிங் சத்தா'.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பஞ்சாப், மும்பை, தமிழ்நாடு, கேரளா, கோவா, இமாச்சலப் பிரதேசம், துருக்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றன.
இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மோனா சிங் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் படமான 'Forrest Gump' படத்தின் இந்தி ரீமேக்காக இப்படம் உருவாகிறது.
'தலாஷ்', '3 இடியட்ஸ்' படங்களுக்குப் பிறகு ஆமீர் கான் - கரீனா இணைந்து பணிபுரியும் மூன்றாவது படம், 'லால் சிங் சத்தா'.
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் சண்டைக் காட்சியில் நடித்த போது ஆமீர்கானுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது.
எனினும் ஆமீர் கான் படப்பிடிப்பை நிறுத்தாமல், சில வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டு தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படப்பிடிப்பை விரைவில் முடிக்க திட்டமிட்டதை அறிந்து கொண்டு ஆமீர் கான் இவ்வாறு செய்துள்ளதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆமீர் கான் புரொடக்ஷன்ஸ் - வையகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.