சான் பிரான்சிஸ்கோ: மெட்டாவுக்குச் சொந்தமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்பை உலகம் முழுவதும் பல நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.
அந்த வகையில், கடந்த மாதம் வாட்ஸ்அப் மெசேஜ் எடிட்டிங் (Message editing) என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, வாட்ஸ்அப் சாட்டிங்கில் நாம் ஒருவருக்கு தவறாக மெசேஜ் அனுப்பிவிட்டால், அதனை எடிட் செய்யலாம். தற்போது வரை, தவறாக மெசேஜ் அனுப்பினால், அதை டெலிட் செய்துவிட்டு மீண்டும் ஒரு மெசேஜை அனுப்பும் நிலைதான் இருக்கிறது. ஆனால், இந்த எடிட் மெசேஜ் அம்சத்தைப் பயன்படுத்தி, அதே மெசேஜை சரியாக எடிட் செய்யலாம்.
இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி, பயனர்கள் மெசேஜ் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் அதை எடிட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறாக அனுப்பிய மெசேஜை லாங் பிரஸ் செய்தால், எடிட் மெசேஜ் ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்து மெசேஜை எடிட் செய்யலாம். இந்த எடிட் மெசேஜ் அம்சம் வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷன்களில் விரைவில் கிடைக்கும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், விண்டோஸ் பீட்டாவில் இந்த மெசேஜ் எடிட்டிங் அம்சம் வெளியிடப்பட்டு உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்து உள்ளது. விண்டோஸ் பீட்டா பயனர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும் என்றும், மெசேஜ் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் மட்டுமே அதனை எடிட் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அம்சம் தற்போது சோதனை முறையில், சில பீட்டா பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த வாரம், விண்டோஸ் பீட்டாவில் டிராயிங் எடிட்டருக்கான புதிய க்ராப் டூலை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி இருந்தது. புகைப்படங்களை எடிட் செய்வதை இந்த அம்சம் எளிதாக்குகிறது என வாட்ஸ்அப் தெரிவித்திருந்தது. அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப் சேனல்ஸ் (WhatsApp Channels) என்ற புதிய அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இது ஒரு தனிப்பட்ட ஒளிபரப்பு சேவையாக இருக்கும் என்றும், பயனர்கள் விருப்பமான சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: WhatsApp Channels: விரைவில் வருகிறது வாட்ஸ்அப்பின் புதிய அம்சம் "வாட்ஸ்அப் சேனல்ஸ்"