பெங்களூரு: இஸ்ரோ - ரஷ்யா அனுப்பிய இரண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் நெருக்கமாக வந்து ஒன்றோடு ஒன்று மோதும் சூழல் உருவானதால் விஞ்ஞானிகள் இடையே பெரும் அதிர்ச்சி நிலவியது.
இந்திய செயற்கைக்கோளான கார்ட்டோசாட் 2 எப், சுமார் 700 கிலோ எடை கொண்டது. ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்திலிருந்து ஜனவரி 18, 2018ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இது ரஷ்யாவின் கானோபஸ் வி விண்கலத்துக்கு மிக நெருக்கமாக வந்தாகக் கூறப்படுகிறது.
இரண்டு செயற்கைக்கோள்களுக்கும் இடையே 224 மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்துள்ளது. இதனால் ஆபத்து ஏற்படுமா என விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விண்ணில் செயற்கைக்கோள்களுக்கு இடையே குறைந்தது ஒரு கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பான அச்சம் எழுந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், இஸ்ரோவின் செயற்கைக் கோளை நான்கு நாட்களாக கண்காணித்து வருவதாகவும், அதனை நகர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.