உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. தினந்தோறும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவருகின்றனர். உலகளவில் அமெரிக்காவில்தான் சுமார் இரண்டு லட்சத்து 85 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில், பெரும்பாலானோர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட சமயத்தில் உயிரிழக்கின்றனர். எடுத்துக்காட்டாக, டைட்ரே வில்கேஸ் என்பவர், கரோனா தொற்று பாதிப்பால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட சமயத்தில் உயிரிழந்துள்ளார்.
அப்போது, அவருடன் நான்கு வயது குழந்தை மட்டுமே இருந்துள்ளது. தந்தை இறந்தது தெரியாமல் அவரின் சடலம் அருகே குழந்தை அமர்ந்திருந்தது பலரை மன ரீதியாக தாக்கியது. இச்சம்பவம் பலருக்கு கரோனா தொடர்பான அச்சத்தை அதிகப்படுத்தியது.
ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பது, மக்கள் மத்தியில் உயிர் வாழ்வதின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. இச்சமயத்தில்தான், ஆன்லைன் இறுதிச்சடங்குகளும் அதிகரிக்கத் தொடங்கின. சாதாரணமாக, இறுதிச்சடங்கிற்கு உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் நண்பர்கள் செல்வார்கள். ஆனால், இந்த கரோனா காலகட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பலரும், காணொலி வாயிலாக இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்று இரங்கல் தெரிவிக்கின்றனர்.
இறுதிச் சடங்குகள் முற்றிலுமாக மாறிவிட்டன. வீட்டில் அனைவரும் ஒன்றுகூடுவது, அழுபவரை கட்டிப்பிடிப்பது, இறந்தவரின் உடலைப் பார்ப்பது போன்ற அனைத்து நிகழ்வுகளும் தொற்றுநோய்க்கு ஆபத்தாகும். இதன் விளைவு, ஜூம் செயலியில் இறுதிச் சடங்குகளுக்கு வழிவகுத்தது. தொழில்நுட்ப வளர்ச்சி இக்கட்டாண சூழ்நிலையில் பெரிதும் உதவியாக இருந்தது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.