திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, 3ஆவது மற்றும் 4ஆவது அணு உலைகள் அமைக்கும் பணி 2017ஆம் ஆண்டு ஜூனில் தொடங்கியது. இந்திய - ரஷ்ய கூட்டு முயற்சியில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 3ஆவது அணு உலையில் ரியாக்டர் பிரஷர் வெசல் (Reactor Pressure Vessel - RPV) எனப்படும் அழுத்தக் கலன் நேற்று (ஏப். 30) நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
அணு உலையின் இதயமாக கருத்தப்படும் இந்த அழுத்தக் கலனை (RPV) பொருத்தியதன் மூலம் அதன் கட்டுமானத்தில் மிகப்பெரும் மைல்கல்லை கூடங்குளம் அணுமின் நிலையம் அடைந்துள்ளது. இதுகுறித்து, கூடங்குளம் அணுமின் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "316 மெட்ரிக் டன் எடையும், 19.45 மீ. உயரமும் கொண்ட இந்த கலன், குறைந்த-அலாய் மற்றும் உயர்-வலிமை கொண்ட எஃகு மூலம் உருவாக்கப்பட்டது. இதில்தான், அணுக்கரு பிளவு (Nuclear Fission) செயல்முறை நடைபெறும். மேலும், இதைத் தொடர்ந்து உலைகளில் மின் உற்பத்தி நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இந்திய அணுசக்தி துறை தலைவரும், நிர்வாக இயக்குநருமான புவன் சந்திர பதக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். உருளை வடிவிலான இந்த கலன் (RPV) 200 மி.மீ தடிமன் கொண்ட சுவர் உடையது எனவும் இதில், உள்ளமைக்கப்பட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன எனவும் அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குநர் ராஜீவ் மனோகர் காட்போல், இந்திய அணுசக்தி துறை அலுவலர்கள், கூடங்குளம் அணுமின் திட்டத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'உலகின் நுரையீரல்' அமேசானுக்கு மூச்சு திணறுகிறது... பேரழிவை நோக்கி உலகம்...