மும்பை: இந்தியாவில் 5ஜி சேவை அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக டெல்லி, மும்பை,பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்பட 13 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவையை ஜியோ மற்றும் ஏர்டெர் நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களிலும் 5ஜி சேவையை வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோ தரப்பில், குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களிலும் 'ட்ரூ 5ஜி' சேவை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், ஜியோ 'ட்ரூ 5ஜி' சேவையை பெறும் நகரங்களின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது.
குஜராத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில் துறைகளில் 5ஜி சேவையின் பங்களிப்பு மாநிலத்தை தொழில்நுட்ப சேவையில் முன்மாதிரியாக திகழவைக்கும். ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் ஜியோ நிறுவனம் இணைந்து குஜராத்தில் 100 பள்ளிகளை 5ஜி சேவை மூலம் டிஜிட்டல் மயமாக்கும் பணிகளும் நடந்துவருகிறது. அதேபோல ட்ரூ 5ஜி தொழில்நுட்பத்தின் உண்மையான ஆற்றலையும், மக்களின் வாழ்க்கையில் எத்தகைய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் ரிலையன்ஸ் ஜியோ வெளிப்படுத்த விரும்புகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரம்மாண்ட எக்ஸோபிளானெட்... ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி புகைப்படம்...