கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் ஆப் மற்றும் கேம்கள் பிற தளங்களில் ஒப்பிடுகையில் மிகவும் பாதுகாப்பானதாக திகழ்கிறது. இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரின் 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஆப் மற்றும் கேம்கள் பெயர் பட்டியலைக் கூகுள் வெளியிட்டுள்ளது.
அதில், 'ஃபிளிப்கார்ட் ஷாப்ஸி (Flipkart Shopsy)' சிறந்த தினசரி தேவை பயன்பாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த பயன்பாட்டில் விற்பனையாளர்களிடமிருந்து எந்த கமிஷனும் எடுக்கப்படவில்லை எனவும், யார் வேண்டுமானாலும், தங்களது மூக ஊடக கணக்குகள் மூலம் இந்த தயாரிப்புகளை விற்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஃபேஷன், மொபைல், அழகு, பாதணிகள் மற்றும் பிற பொருட்கள் இதில் கிடைக்கின்றன. இதனால் இந்த செயலி அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவர்களுக்கான “குவெஸ்ட் (Questt)” சிறந்த செயலியாகவும் உருவெடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் மாணவர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ற பாடங்களை வழங்குகிறது. மேலும், விளையாட்டுத்தனமாக மாணவர்கள் கற்கும் திறனை அதிகரிக்க, இந்த செயலி தனித்துவமாக உள்ளது.
தொடர்ந்து “கியால் (Khyaal)”, மூத்த குடிமக்களுக்கான சிறந்த பயன்பாடுகளில் முதலிடம் பிடித்துள்ளது. இவை, மூத்த குடிமக்களுக்கு ப்ரீபெய்ட் கார்டுகளை வழங்குவதிலும், அவர்களின் தேவைகள் தொடர்பான தயாரிப்புகளில் தள்ளுபடி செய்வதிலும் சிறந்து விளங்குகிறது.
குழந்தைகளுக்கான விளையாட்டு செயலிகளிலே “பேபி ஜி (BabyG)” சிறந்து விளங்குகிறது. இதில், குழந்தைகளின் வளர்ச்சிகள் குறித்துப் பெற்றோர்கள் அறிந்துகொள்ளலாம். மேலும் குழந்தைகளுக்கான பல கதைகள் இதில் உள்ளது.
இதனைத்தொடர்ந்து 2016 இல் வெளியிடப்பட்ட “லுடோ கிங் (Ludo King)” பயன்பாடு இன்னும் பிரபலமாக உள்ளது. இதனால், கூகுள் லுடோ கிங் செயலியை தற்போதைய பிரிவில் கவுரவித்தது. அதே பிரிவில் “ரியல் கிரிக்கெட் 20 (Real Cricket 20) செயலியையும் தேர்வு செய்துள்ளது.