டெல்லி: தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் வன்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்னாப்டிராகன் நிறுவனம், அடுத்தகட்டமாகத் தகவல் சாதனங்களில் ஒலியமைப்பின் துல்லியத்தன்மையை மேம்படுத்தும் வகையிலான தொழில்நுட்பச் சந்தைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
நாம் பயன்படுத்தும் 80 விழுக்காடு ஸ்மார்ட்போன்களில் (திறன்பேசி) இடம்பெற்றிருக்கும், இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட். இதன் வளர்ச்சியானது அடுத்த தலைமுறைப் பயனர்களுக்குப் புதுப்புது தொழில்நுட்பங்களை நிறுவி, சந்தையில் தனக்கென ஒரு நீங்கா இடத்தைத் தக்கவைத்துள்ளது.
இவ்வேளையில், ஒலியமைப்பிற்கான சிப்செட் சோதனையில் ஸ்னாப்டிராகனின் தாய் நிறுவனமான குவால்காம் ஈடுபட்டிருந்தது. அதன் நிறைவுப் பகுதிக்கு எட்டியிருப்பதாகக் கூறியிருக்கும் நிறுவனம், இந்தாண்டு இறுதிக்குள் தங்களில் ஸ்னாப்டிராகன் சவுண்ட் டெக் சிப்செட்டுகள் சந்தைக்கு வரும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், சியோமி நிறுவனமும் குவால்காம் நிறுவனத்துடன் உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சவுண்ட் டெக் சிப்செட்டுகள் பொருத்தப்பட்ட தனது ‘மி’ ரக திறன்பேசிகளை நிறுவனம் வெளியிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனவே, பயனர்களுக்குத் துள்ளலான இசை துல்லியமாகக் குறைந்த விலையில் கேட்கும் தருணம் வந்துவிட்டதாக டெக் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.