கோட்டயம் (கேரளா): மழை வெள்ளம், புயலை தாங்கி நின்று, பெரு வெள்ளம் வரும் வேளையில், வானுயர்ந்து எழும்பும் வீடு அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கடவுளின் தேசமாம் கேரளாவின் ரம்மிய அழகிற்கு, கோட்டயம் மாவட்டம் கூடுதாலாக வலுசேர்க்கும். மலைகள் சூழ, ஆறுகள் வழிந்தோட, பறவைகள் கொஞ்சிட என இந்த மாவட்டமே இயற்கை அன்னையின் வரம் என்று தான் நினைக்கத் தோன்றும்.
கண்ணீர் தேசம்
என்ன தான் இயற்கை வளங்கள் செழித்திருந்தாலும், மழை காலம் என்றால் கடவுளின் தேசம் கண்ணீர் தேசமாக மாறும் சூழலை கடந்த சில ஆண்டுகளாக நாம் காண முடிகிறது. வளர்ந்து வரும் வணிகம், தேவை ஆகிய காரணங்களினால் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், செயற்கை மாய பிம்பத்திற்கு மக்கள் தரும் ஆதரவு மற்றொரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
மழை காலங்களில் நீர் நிலைகள் எல்லாம் செழிக்க, வீடுகளின் உள்ள மக்கள் அனைவரும் பயத்துடன் இருக்கும் நிலை தான் தற்போது இருந்து வருகிறது. வீடுகளுக்குள் புகும் நீர் என்பதல்ல இங்கு பிரச்னை. அது விட்டுச்செல்லும் வடு, ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரத்தையே நிலைகுலைய செய்துவிடுகிறது.
இந்த நீர் வடுகளை களைய தான் கோபாலகிருஷ்ணன் ஆசாரி களம் கண்டார். கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு ஆய்வுத் திட்டத்தைக் கொண்டு, மழை வெள்ள காலங்களில் மேலெழும்பும் வீட்டைக் கட்ட முடிவு செய்தார்.
வானுயரும் வீடு
தொடர்ந்து அதற்கான முதலீடுகளை ஈர்க்க நினைத்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், சோர்ந்துபோக வில்லை அவர். தொடர்ந்து, தன் இடத்திலேயே, சொந்த பணத்தில் 1200 சதுர அடி, மிதக்கும் வீட்டை கட்டி சாதனை படைத்தார். ஆம், இவர் கட்டிய வீடு, மழை நீர் தேங்கினால், அதற்கேற்றார் போல மேலெழும்புமாம்! மொத்தமாக 10 அடி வர மேலெழும்பும் வண்ணம் இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
வீட்டின் அடிதளத்திற்கு கீழுள்ள நான்கு மூலைகளிலும் 4 பிஸ்டன்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அடித்தளத்தில் கனமான ஜிஐ பைப்புகள் கொண்டு தரைத்தளத்திற்கான அரண் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழ் காற்றடைக்கப்பட்ட பேரல்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளது. அடித்தளம் ஓகே... ஆனால் இதை எப்படி மேல்தளம் தாங்கும் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் தோன்றும்.
கட்டுமான முறை
சாதாரண வீடுகளை போன்று, இந்த வீட்டை கட்டமைக்க செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட் பயன்படுத்தப்படவில்லை. அதனைத் தவிர்த்து, ஜிஐ பைப்புகள், மறுசுழற்சி செய்து வலுவூட்டப்பட்ட மரங்கள், பிளாஸ்டர் ஆப் பேரிஸ் கொண்டு கட்டுமானம் பூர்த்தியாக்கப்பட்டது.
இந்த வீட்டின் முக்கிய அம்சம் என்னெவென்றால், கழிவுநீர் தொட்டி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை கூட வீட்டுடன் சேர்ந்த மழைநீர் தேங்கினால் மேலெழும்பும். கேட்க சாதாரணமாக இருக்கலாம். ஆனால், வெள்ள நீர் சூழ்ந்தால், கழிவறையின் நிலைமை மிகவும் மோசமானதாக மாறிவிடும் என்பது, அதனை அனுபவித்தவர்கள் மட்டும் அறிவர்.
சொகுசு வசதிகள்
கழிவுநீர் தொட்டியில் நீர் தேங்கினால், கழிவறையில் இருந்து நீர் வெளியே செல்லாது. இந்த கொடுமையான துயரத்தை சரிசெய்திருக்கிறது, கோபாலகிருஷ்ணனின் கட்டுமான நுணுக்கம். சாதாரண வீடுகளை போன்று, இங்கும் தரைக்கு, தரமான பசை உதவியுடன் டைல்ஸ் ஒட்டப்பட்டுள்ளது.
மாடுலார் கிச்சன், ஃபால்ஸ் சீலீங் என இந்த வீட்டிற்கு எந்த குறையும் இல்லை. ஒரு படி மேலாக, இந்த வீட்டின் தரைத்தளத்திற்கு மேல், முதல் தளத்தையும், இதே தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டமுடியுமாம். அப்புறம் என்ன, எல்லோரும் இதே போன்ற வீட்டை நிர்மாணிக்க வேண்டியது தானே என்ற தோற்றம் எழலாம்.
மக்கள் மனம் மாற வேண்டும்
மக்களின் மனதில் புதைக்கப்பட்ட வீடு கட்டுமான அமைப்பு என்பது இன்னும் மாறவில்லை என்கிறார் கோபாலகிருஷ்ணன். இந்த வீடு வலுவற்றது, சாதாரண வீட்டை போன்று, இதனை உபயோகப்படுத்த முடியாது என்றெல்லாம் தன்னை புறக்கணித்ததாகக் கூறுகிறார் அவர்.
தற்போது, அரசிடம் தன் கட்டுமான நுட்பத்திற்கான அங்கீகாரத்தை கோரியுள்ள பொறியாளர் கோபாலகிருஷ்ணன், மிக விரைவில் இந்த தொழில்நுட்பத்தை அரசு அங்கீகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி பொதுமக்களை திக்குமுக்காட வைப்பது உண்மை. எதனை தேர்ந்தெடுப்பது, எதனைத் தவிர்ப்பது என்ற குழப்பம் மக்கள் மத்தியில் சுழன்று வருகிறது. அனைத்தையும் விடுத்து, தனக்கெது தேவை என்பதை சரியாக உணர்ந்து, அது சார்ந்த தொழில்நுட்பத்தை தேர்வு செய்வது தான் நம்மை மேன்மைப்படுத்தும்.
இதையும் படிங்க: சொந்த கிராமத்திற்காக ரூ.6.5 கோடி செலவில் அரசு பள்ளி கட்டடம் - நெகிழ வைத்த தொழிலதிபர்