கனடாவில் உள்ள மக்கில் பல்கலைக்கழகத்தில் ( McGill University ) வேதியியல் பொறியியல் பேராசிரியராக பணியாற்றி வருபவர் நத்தலி துஃபென்கி ( Nathalie Tufenkji ). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, அங்குள்ள மாண்ட்ரீல் கஃபே ஒன்றில் தேநீர் அருந்துவதற்காக சென்றிருந்தார். அவருடைய குவளையில் நெகிழியால் ஆன டீபேக் வைக்கப்பட்டிருந்தது. இது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியது என்று சிந்தித்த நத்தலி துஃபென்கி இது குறித்து ஆராயச்சி செய்ய முடிவு செய்தார்.
பின்னர் அவருடைய மாணவி லாரா ஹெர்னாண்டஸி ( Laura Hernandez ) உதவியுடன் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்து நெகிழியால் ஆன சில டீபேக்களை சேகரித்தார். பின்னர் அவற்றை தனது ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்திய போது, அந்தப் பைகள் சூடான தேநீரில் நெகிழித் துகள்களை வெளியிடுவது தெரிந்தது.
இவரோடு மெர்கில் பல்கலைக்கழகத்தின் சக ஆராய்ச்சியாளர்களும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். கொதிக்கும் நீரில் நான்கு வகையான டீபேக்களை பரிசோதனைக்கு உட்படுத்திய அந்த ஆய்வில் ஒரு டீபேக் 11 பில்லியனுக்கும் அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்களையும் மூன்று பில்லியன் நானோபிளாஸ்டிக் துகள்களையும் வெளியிடுவது தெரிந்தது. பின்னர் அந்த டீபேக்களை 203 டிகிரி பாரன்ஹீட் வரை சூடேற்றப்பட்ட நீரில் ஐந்து நிமிடங்கள் செங்குத்தாக மூழ்கும் நிலையில் வைத்தனர்.
அதிலிருந்து எடுக்கப்பட்ட சில சொட்டுக்களை ஒரு ஸ்லைடில் சேகரித்து எலக்ட்ரான் நுண்ணோக்கியின் கீழ் பகுப்பாய்வு செய்த போது, அவை நைலான், பாலிஸ்டர் போன்ற நெகிழிப் பொருட்களால் ஆனது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களின் இந்த கண்டுபிடிப்பு அமெரிக்க கெமிக்கல் சொசைட்டி இதழில் இந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இயற்கைக்கான உலகளாவிய நிதியம், ஒரு நபர் சராசரியாக, ஒரு வாரத்திற்கு 5 கிராம் பிளாஸ்டிக் உட்கொள்ளலாம் என்று அறிக்கையை வெளியிட்டிருந்ததது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய நத்தலி துஃபென்கி, நாம் தினமும் டீக்கு பதிலாக பிளாஸ்டிக்கை குடிக்கிறோம் என்றும் அந்த துகள்களில் சில, மனித உயிரணுக்களில் ஊடுருவக்கூடிய அளவுக்கு சிறியதாக இருக்கும் என்றும் சில உற்பத்தியாளர்கள் தேயிலையை காகிதப் பைகளில் விட பிளாஸ்டிக் பைகளில் விற்கிறார்கள் அதன் பின்விளைவுகளை அறியாமல் உலகெங்கிலும் உள்ள மக்கள் அதையே விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படியுங்க:
அடுத்தடுத்து வேலை நாள்களை குறைக்கும் சரக்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள்