ஹைதராபாத் (தெலங்கானா): மாநில அரசு 'வானிலிருந்து மருந்து' எனும் ட்ரோன் மூலம் மருந்துகளை விநியோகுக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
இதனை ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வுக்கு தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமாராவ் தலைமை வகித்தார்.
உலகப் பொருளாதார மன்றம், என்ஐடிஐ ஆயோக், ஹெல்த்நெட் குளோபல் (அப்போலோ மருத்துவமனைகள்) ஆகியவற்றுடன் இணைந்து, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரோன்கள் மூலம் தொலைதூரப் பகுதிகளுக்கு மருந்துவப் பொருள்களை கொண்டு செல்ல இந்தத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும். அவசர காலங்களில் மருந்துகள், தடுப்பூசிகளை விரைவாக வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் சுமார் 40 கிலோமீட்டர் வரை பயணிக்கிறது. ஒரு ட்ரோனில் 15 வகையான மருந்துகள், தடுப்பூசிகளை எடுத்துச் செல்ல முடியும். மருந்துகள் ட்ரோனில் கட்டமைக்கப்பட்டுள்ள நான்கு வெவ்வேறு பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இந்த ட்ரோன்கள் தரையில் இருந்து 500-700 மீட்டர் உயரத்தில் பயணிக்கும்.
இந்தத் திட்டத்தில் ட்ரோன் ஆபரேட்டர்கள், சுகாதாரத் துறை, விமான போக்குவரத்து கழகம் ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. ட்ரோன்கள் மீதான விதிமுறைகளை சமீபத்தில் ஒன்றிய அரசு தளர்த்தியதைத் தொடந்து இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.