உலகம் முழுவதும் உள்ள வலைப்பின்னல்களைத் தங்களின் களமாகக் கொண்டும், ஸ்மார்ட்போன்களைத் தங்களின் சுரண்டல் கருவிகளாகவும் கொண்டு சைபர் குற்றவாளிகள் கள்ளத்தனமாகச் சுற்றித் திரிகின்றனர்.
மத்திய உள் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அண்மையில் கொடுத்த தகவலின்படி, 2019ஆம் ஆண்டு நாட்டில் நான்கு லட்சம் சைபர் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்பது தெரியவந்துள்ளது. கோவிட் பெருந்தொற்று சமயத்தில் இந்த எண்ணிக்கையானது 11.4 லட்சமாக அதிகரித்திருக்கிறது.
சோபோஸ் என்னும் மென்பொருள் நிறுவனம் நடத்திய ஆய்வில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் நாட்டில் உள்ள 52 விழுக்காடு நிறுவனங்கள் சைபர் தாக்குதலுக்குள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் சைபர் தாக்குதலால் 35 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 13 கோடி பேர் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இணைய குற்றங்கள், இணைய சூதாட்டங்கள், இணையவழிக் கடன் செயலிகள் ஆகியவற்றின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. போதுமான ஆதாரங்கள் கிடைப்பதில்லை என்பதால் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் தண்டனை பெறுவது என்பது மிகவும் குறைவாக இருக்கிறது.
இதனாலேயே இணையவழி மோசடியில் 50 விழுக்காடு வழக்குகள் ஆரம்பகட்ட புலனாய்விலேயே முடிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் கோவா போன்ற மாநிலங்களில் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு நபர்கூட தண்டிக்கப்படவில்லை. சட்டத்தின் பிடியிலிருந்து இத்தகைய குற்றவாளிகள் எப்படி தப்பிக்கின்றனர் என்பதை இது வெளிகாட்டுகிறது.
சைபர் குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் எந்த உதவியும் இல்லாமல் இருக்கும் நிலையில் ஒரு சைபர் குற்ற வழக்கில் வழக்கில் புலனாய்வு முடியும் முன்பு, 20 முதல் 30 வழக்குகள் அடுத்தடுத்து வரிசைகட்டி நிற்கின்றன. எப்படியோ குற்றவாளியைத் தேடி அவர்களைப் பிடிக்கும்போது, அவர்கள் மோசடி செய்த பணத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ஏனெனில் மோசடி செய்தவுடன் இந்தக் குற்றவாளிகள் வேறு ஒரு கண் காணாத இடத்துக்கு பணத்தைப் பரிமாற்றம் செய்துவிடுகின்றனர் என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.
மாநில அரசால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் கடன் செயலிகள் இன்னொரு முக்கியப் பிரச்னையாக உருவெடுத்திருக்கின்றன. பெரும்பாலான தற்கொலைகளுக்கு காரணமான கடன் செயலிகளின் செயல்பாடுகளை மாநில அரசுகளால் முற்றிலும் தடுக்க முடியவில்லை. இதன்பேரில் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு இல்லாவிட்டால், சைபர் குற்றங்களைத் தடுப்பது சாத்தியமற்றதாகிவிடும்.
கரோனா பெருந்தொற்று காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றும் மரபு அதிகரித்திருப்பதால், டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களில் தனிநபர் தகவல்கள் திருடப்படுவது அதிகரித்திருத்திருக்கிறது.
ஒரு மருத்துவ மாணவரின் பெயரில் 9ஆவது வகுப்பு படிக்கும் மாணவர் ஒரு ஆபாச செய்தியை அனுப்பிய ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்தது. கணினிகள் ஹேக்செய்யப்பட்டு கடன் அட்டைகள் தொடர்பான விவரங்களைத் திருடி எண்ணிலடங்கா மோசடிகள் நடைபெற்றுவருவது பதிவாகியிருக்கிறது.
பரிசுகளையும், கடன்களையும் வழங்குவதாகக் கூறி பொறிக்குள் சிக்கவைத்து அப்பாவிகளை இத்தகைய நபர்கள் ஏமாற்றுகின்றனர். இணையவழி துன்புறுத்தல்கள், மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குச் சட்டத்தில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், இத்தகைய குற்றவாளிகளை உரிய நேரத்தில் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க முடியாதபட்சத்தில் இதுபோன்ற சட்டங்களால் பலன் ஏதுமில்லை.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரேசில் போன்ற இதர நாடுகள் சைபர் குற்றங்களைத் தடுக்க அவ்வப்போது யுக்திகளை மாற்றி சட்டங்களை இன்னும் கடுமையாக்கிவருகின்றன. ஒரு ஆண்டில் மட்டும் 1.25 லட்சம் கோடி ரூபாய் பணத்தை மோசடிசெய்த சைபர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் அலுவலர்களால் எப்படி அலட்சியமாக இருக்க முடிகிறது?
நமது நாட்டில் ஒரு நபர் இன்னொரு நபரின் வாழ்க்கையைப் பறித்துவிட்டால் (கொலைசெய்துவிட்டால்) அப்படிப் பறித்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், எண்ணற்றோரின் வாழ்க்கையில் விளையாடும் இத்தகைய சைபர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டப்படுகிறது. சட்டங்களை இன்னும் கடுமையானதாக மாற்ற, சட்டங்கள் மறு ஆய்வுக்குள்படுத்தப்பட வேண்டும். மீண்டும் எழுதப்பட வேண்டும்.
112 என்ற எண் கொண்ட தொலைபேசி சேவையில் பதிவாகும் ஆன்லைன் பண மோசடி குறித்த வழக்குகளில் குற்றவாளிகளின் வங்கிக் கணக்கிலிருந்து பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்குக்கு இரண்டு மணி நேரத்தில் மோசடிசெய்த பணத்தை மாற்றும் ஒரு முறை பெங்களூரு நகர காவல் துறையினரால் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற திட்டங்கள் மேலும் சில மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட வேண்டும். சைபர் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற மோசடி வழக்குகளைக் கையாள விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். சைபர் குற்றங்களைத் தடுக்க உதவும் தொழில்நுட்பங்களை மத்திய மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: கோவிட்டுக்கு எதிராகக் கடும் யுத்தம் செய்ய வேண்டிய நேரம் இது