சுஸுகி - டொயோடா நிறுவனம் இணைந்து செயல்படும் விதத்தில் இரு நிறுவனங்களும் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி சுஸுகி தயாரித்த 'எஸ்யுவி விடாரா பிரீஸா' ரக வாகனங்கள் 2022ஆம் ஆண்டில் டொயோட்டா ஆலையில் தயாராகும் என்று தெரிகிறது.
இரு நிறுவனங்களும் இணைந்து தங்களது செயல்பாடுகளை ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் விரிவுபடுத்த ஒப்புக் கொண்டுள்ளன.
இந்தியாவில் உள்ள டொயோடா ஆலையில் சியாஸ், எர்டிகா ரக வாகனம் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை சுஸுகி அளிக்கும். அதேபோல இந்தியாவில் உற்பத்தியாகும் பலெனோ, பிரீஸா, சியாஸ், எர்டிகா ரகங்களை டொயோடா நிறுவனம் ஆப்பிரிக்க நாடுகளில் விற்பனை செய்வதற்கு அனுப்பும் என்று இரு நிறுவனங்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர இரு நிறுவனங்களும் ஹைபிரிட் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதெனவும் முடிவு செய்துள்ளன.
சுஸுகி நிறுவனம் தயாரித்து அளிக்கும் சிறிய ரக வாகனங்களுக்கான எந்திரத்தை, டொயோடா வாகனங்களில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை போலந்தில் உள்ள டொயோடா ஆலையில் தயாராகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலாக டொயோட்டா நிறுவனம் மின்கல (Battery) வாகன தொழில்நுட்பத்தை சுஸுகி நிறுவனத்துக்கு அளிக்கும்.
இந்தியாவில் பலெனோ (Baleno), விடாரா பிரீஸாவை (Vitara Breeza) டொயோட்டாவுக்கு சுஸுகி அளிக்கும். அதேபோல டொயோட்டா நிறுவனம் கொரோலா செடானை சுஸுகி நிறுவனத்துக்கு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.