டெல்லி: தனியார் இணையதளம் ஒன்று இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் முதல் டெஸ்லா மாடல் 3 காரின் விலையை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, எலான் மஸ்க் தலைமையேற்று நடத்திவரும் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, மின்சார வாகனங்களுக்கென தனது புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்து, உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
திறன்மிகுந்த ஆராய்ச்சி துறையைக் கொண்ட டெஸ்லா
இதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை மிக பிரபலமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்திலிருந்து டெஸ்லா மாடல் 3, டெஸ்லா மாடல் எஸ், டெஸ்லா மாடல் எக்ஸ், டெஸ்லா மாடல் ஒய் ஆகிய நான்கு ரக கார்கள் பல விருப்பப் பதிப்புகளில் ஐரோப்பிய நாடுகளில் சாலைகளில் களமாடி வருகிறது.
சொகுசான வசதிகள், ஒரு முறை மின்னூட்டம் செய்தால் அதிக தூரம் பயணம் மேற்கொள்ளும் வசதி ஆகியன டெஸ்லா நிறுவன கார்களின் சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த இந்தியாவில் தங்கள் கார்களின் விற்பனை தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் கால்பதிப்பு
அதன்படி இந்தியாவில் முதலாக தங்கள் நிறுவனத்தில் டெஸ்லா மாடல் 3 ரக கார்களை களமிறக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரீமியம் ரக கார்களான மாடல் எஸ், மாடல் எக்ஸ் ஆகிய கார்களை சந்தைப்படுத்த டெஸ்லா நிறுவனம் முனைப்புக் காட்டி வருகிறது.
டெஸ்லா மாடல் 3
முதலாவதாக வெளியிடப்படும் டெஸ்லா மாடல் 3 காரின் விலை ஏறக்குறைய 60 லட்ச ரூபாய்க்கு இந்திய சாலைகளில் கால்பதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு தடவை மின்னூட்டம் செய்தால், இதன் ஸ்டாண்டெர்டு பதிப்பு 423 கிமீ வரையும், லாங்கு ரேஞ்ச் 568 கிமீ வரையும் செல்லும். விரைவாக மின்னூட்டும் வசதி, குறைந்த பராமரிப்பு, சொகுசான உள்கட்டமைப்பு என காரின் சிறப்பம்சங்கள் ஏராளம் உள்ளது.
டெஸ்லா மாடல் 3 தோற்றம்
தொடர்ந்து படையெடுக்கும் டெஸ்லா
ஜூலை 2021இல், டெஸ்லா மாடல் எஸ் ரகம் ரூ.1.50 கோடிக்கும், ஜனவரி 2022 டெஸ்லா மாடல் எக்ஸ் ரூ.2 கோடிக்கும், ஜனவரி 2023இல் டெஸ்லா மாடல் ஒய் ரூ.50 லட்சத்துக்கும் இந்தியாவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.