இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக நிறுவனத்தின் முதல் மாடலான ஹெக்டர் எஸ்யூவிக்கும், அடுத்து வந்த இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், இன்டர்நெட் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் கார் இது என்பதே.
இந்நிலையில், எம்ஜி மோட்டார்ஸ் தனது அடுத்த முயற்சியாக உபயோகித்த கார்களை வாங்கி விற்பனை செய்யும் ’எம்.ஜி. ரீஷூர்’ எனும் திட்டத்தில் களமிறங்கியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கார்களை விற்பனை செய்கையில், விரைவான பணம் கிடைப்பதற்கான நோக்கத்திலே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாங்கள் வாங்கும் வாகனத்தை 160க்கும் மேற்பட்ட குவாலிட்டி சோதனைகள் நடத்திவிட்டு, இறுதியாக அனைத்து விதமான பிரச்னைகளையும் சரிசெய்துவிட்டு தான் விற்பனை செய்வோம். மேலும், எம்ஜி கார் வைத்திருக்கும் உரிமையாளர்கள் பழைய காரைக் கொடுத்துவிட்டு புதிய காரை எளிதாக மாற்றிக்கொள்ளலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய எம்.ஜி மோட்டார் இந்தியாவின் தலைமை வணிக அலுவலர் கவுரவ் குப்தா, "எம்.ஜி. ரீஷூர் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படைத்தன்மை, வேகம், மன அமைதி, எம்.ஜி கார்களின் சிறந்த மறுவிற்பனை மதிப்பை உறுதிப்படுத்தும் தளத்தை உருவாக்க விரும்பினோம். இந்த முயற்சி வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதை மேம்படுத்துவதோடு, எம்ஜி குடும்பத்தோடு இணைந்து பல காலங்கள் குடும்ப உறுப்பினர்களாக அவர்கள் வலம் வரவும் உதவுகிறது" என்றார்.
தற்போது, நாட்டில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெக்டர், ஹெக்டர் பிளஸ், இசட்எஸ் மின்சார வாகனம் போன்ற மாடல்களை விற்பனை செய்யப்படுகின்றன. விரைவில் ’குளோஸ்டர் எஸ்யூவி’ எனும் புதிய மாடலை அறிமுகப்படுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.