பெங்களூரு: ஆதித்யா எல் 1 விண்கலம், 110 நாள் பயணமாக சூரியனின் எல் 1 பகுதிக்குச் சென்றடையும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. இருப்பினும், ஆதித்யா சென்றடையும் நாளை இஸ்ரோ குறிப்பிடாமல் இருந்த நிலையில், 2024 ஜனவரி மாதம் 6ஆம் தேதி ஆதித்யா விண்கலம் சூரியனின் L1 புள்ளியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோவின் இயக்குநர் ஸ்ரீ நிலேஷ் தேசாய் அறிவித்துள்ளார்.
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து 'ஆதித்யா எல் 1' விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் வாயிலாக கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ பயணித்து சூரியனின் எல் 1 புள்ளியின் சுற்றுவட்டப் பாதையை அடைந்து, அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது.
எல் 1 புள்ளியை நோக்கிப் பயணிக்கும் ஆதித்யா விண்கலம், விண்வெளியில் இருக்கும் காற்றில் உள்ள துகள்கள், அயனிகள் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது. மேலும், ஆதித்யா விண்கலம் இந்த ஆய்வை தன் வாழ்நாள் முழுவதும் தொடரும் என மூத்த வானியல் இயற்பியலாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இஸ்ரோ இயக்குநர் ஸ்ரீ நிலேஷ் தேசாய் கூறுகையில், “ ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக சூரியனின் சுற்றுவட்டப் பாதையை அடைந்த உடன், பூமி மற்றும் செயற்கைக்கோள் ஒன்றாக நகரத் தொடங்கும். இதனால் சூரியனை ஆய்வு செய்வதில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் ஆதித்யா, அதனுடைய பணிகளைச் செய்யும்” என்றார்.
ஆதித்யா விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள STEPS கருவியின் மூலம் சூரியனிலிருந்து வெளிவரும் வெப்ப ஆற்றல், அயனிகள், எலக்ட்ரான்கள் மூலம் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது X வலைத்தளத்தில், “ ஆதித்யா விண்கலம் எல் 1 புள்ளியை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது.
விண்கலம் இப்போது சூரியன், பூமி இடையேயான எல் 1 புள்ளிக்கு எடுத்துச் செல்லும் பாதையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளது. லெக்ராஞ் புள்ளி என்பது இரண்டு பொருள்களுக்கு இடையில் செயல்படும் ஈர்ப்பு விசைகள் கிடைக்கும் பகுதியாகும். ஆதித்யா விண்கலத்தை நீண்ட காலத்திற்கு எல் 1 புள்ளியில் நிலை நிறுத்தும் சமநிலைப் பகுதியாகும். கணிதவியலாளர் ஜோசப் லூயிஸ் லாக்ரேஞ்ச் தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சூரியனை ஆய்வு செய்ய தொடங்கியது ஆதித்யா எல்.1 - தரவுகள் சேகரிப்பு - இஸ்ரோ தகவல்!