”தோல்வி பயம் யாரை விட்டது? அமெரிக்க அதிபரே ஆனாலும், தேர்தலில் வெற்றிக்கு வாய்ப்பில்லை, பதவியைத் தக்கவைக்க முடியாது என்னும் சூழலில் தேர்தல் ஜுரம் பாடாய்ப்படுத்தும். டிரம்ப் மட்டும் விதிவிலக்கா என்ன? சூறாவளியென சுற்றிச் சுழன்று தொய்வின்றி தாக்கி வரும் கோவிட்-19 வைரஸ் பரவலின் பிடியில் அமெரிக்கா சிக்கித் தவிக்கும் நிலையில், கடும் விமர்சனத்துக்கு ஆளகியிருக்கும் அதிபர் டிரம்ப், 2020 அதிபர் தேர்தலை ஒத்திவைக்க முயன்று வருகிறார்.
கரோனா அச்சத்தின் காரணமாக அஞ்சல் வாக்கிற்கு ஆதரவு பெருகிவருவதைக் கண்டு அதற்கெதிராக பொங்கி எழுகிறார். அஞ்சல் வாக்கில் ’துல்லியமான’ முடிவு தெரியாது, கிடைக்கும் முடிவுகள் சரியாக இருக்காது என முழங்குகிறார். ஆனால், நிதர்சனமான உண்மை என்னவென்றால், டிரம்ப் தோல்வியை எதிர்கொண்டுள்ளார் என்பதே” என முன்னணி அமெரிக்க வரலாற்றாசிரியரும், கடந்த 40 ஆண்டுகளாக அதிபர் தேர்தல் முடிவுகளை துல்லியமாகக் கணித்தவருமான ஆலன் லிக்ட்மேன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ’நியூயார்க் டைம்ஸ்’ நாளேட்டில் வெளியான அவரது தேர்தல் கணிப்பு, அவர் உருவாக்கிய ’திறவுகோல்கள்’ மாதிரியை அடிப்படையாக் கொண்டுள்ளது. இதன் வழியாக அடைந்த முடிவுகளின்படி டிரம்ப் கண்டிப்பாக தோல்வியைத் தழுவுகிறார், என்கிறார் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கப் பலகலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் லிக்ட்மேன்.
’வெள்ளை மாளிகைக்கான திறவுகோல்கள்’ என்ற நூலின் ஆசிரியரான லிக்ட்மேன் 1980இல் இருந்து ஒவ்வொரு அதிபர் தேர்தல் முடிவையும் வெற்றிகரமாகக் கணித்துள்ளார். பிற கருத்துக் கணிப்புகளை விடவும், இவரது கணிப்பு பிசிறுகள் ஏதுமின்றி துல்லியமாக இருந்து வந்துள்ளது. தனது திறவுகோல்கள் மாதிரிக்கு 13 வரலாற்றுக் காரணிகளை அடிப்படையாக வைத்துள்ளார் லிக்ட்மேன்.
அண்மையில் வெளியான ’ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ தினசரியில் வெளியான ’ரியல் கிளியர் பாலிடிக்ஸ்’ தரவுகளை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் களஆய்வு, டிரம்பை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அமெரிக்க குடியரசு துணைத் தலைவருமான ஜோ பிடன் மிகப் பெரும் வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பின்படி, அதிபரைத் தேர்ந்தெடுக்கும் அவையின் 538 உறுப்பினர்களின் வாக்குகளில், ஜோ பிடன் 308 வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் நிலையில், மாறாக டிரம்ப் வெறும் 113 வாக்குகளை மட்டுமே பெற இயலும். அதிபராக வெற்றிபெற 270 வாக்குகள் பெற்றாலே போதும் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், இந்தத் தேர்தல் அவையிலும் வெற்றி பெற்றால்தான், வெள்ளை மாளிகையில் அதிபராக காலடி எடுத்து வைக்க முடியும்.
தோல்வியை எதிர்கொண்டுள்ள அதிபர் டிரம்ப், இந்தக் கருத்துக் கணிப்புகள், தனக்கு ஆதரவளிக்கும் பெருவாரியான மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை என்று மார்தட்டுகிறார்.
இருப்பினும், தனது ’திறவுகோல்கள்’ சுட்டுவது போல டிரம்ப் தோல்வியடைவது நிச்சயம் என்பதில் உறுதியாக இருக்கிறார் லிக்ட்மேன். அது சரி, இந்த ’திறவுகோல்கள்’ மாதிரி என்றால் என்ன? அது செயல்படும் விதம் என்ன? அது குறித்து இப்போது பார்க்கலாம்.
லிக்ட்மேனின் ’திறவுகோல்கள்’ மாதிரி அடிப்படையாகக் கொண்டு செயல்படும் 13 வரலாற்றுக் காரணிகள் பின்வருமாறு: வேட்பாளர் சார்ந்த கட்சியின் இடைத் தேர்தல் வெற்றி, போட்டியின்மை, ஆட்சியில் இருப்பது, போட்டியில் மூன்றாம் நபர் இல்லாதது, குறைந்தகால அளவிளான வலுவான பொருளாதாரம், நீண்டகால அளவிளான வலுவான பொருளாதாரம், பெரு முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மாற்றம், ஊழல் அல்லது பிற குற்றச்சாட்டுகளில் சிக்காதது, இராணுவ / அயலுறவு தோல்விகள் இல்லாதது, அயல்நாட்டில் இராணுவ வெற்றி, ஊழல் அல்லது பிற குற்றச்சாட்டுகளில் சிக்காதது, ஆட்சியில் உள்ளவரின் கவர்ச்சி மற்றும் எதிர்த்துப் போட்டியிடுபவரின் கவர்ச்சியின்மை.
மேலே பட்டியலிடப்பட்ட 13 காரணிகளில் ஒவ்வொன்றுக்கும் ஆம், இல்லை என்ற இரட்டை வகைப்படுத்தல் மட்டுமே உண்டு. ஆறு அல்லது அதற்கும் மேற்பட்டவை இல்லை என்றால், ஆட்சியில் இருக்கும் அதிபர் வெள்ளை மாளிகையைக் காலி செய்ய வேண்டியதுதான். இதுவரையிலுமான தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதும் இதுவே.
டிரம்ப்புக்கு போட்டியாக பிடன் இருக்கும் நிலையில், ஏழு காரணிகள் இல்லை என்ற வகைப்பாட்டின் கீழ் வருவது, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கே சாதகமாக இருப்பதாக பேராசிரியர் லிக்ட்மேன் கணித்துள்ளார். ஜோ பிடனுக்கு சாதகமாக உள்ள அம்சங்கள் பின்வருமாறு: இடைத்தேர்தல் வெற்றிகள், குறைந்தகால அளவிளான வலுவான பொருளாதாரம், நீண்டகால அளவிளான வலுவான பொருளாதாரம், ஊழல் அல்லது பிற குற்றச்சாட்டுகளில் சிக்காதது, அயல்நாட்டில் இராணுவ வெற்றி மற்றும் ஆட்சியில் உள்ளவரின் கவர்ச்சியின்மை.
ஆனால், கருத்துக் கணிப்புகளை விடவும் இந்த ’லிக்ட்மேனின் மாதிரி’ எந்த அளவு நம்பிக்கைக்கு உரியது?
“அதிபர் தேர்தலுக்கான பரப்புரையால் எந்தப் பலனும் இல்லை என்று அவர் அழுத்தமாகக் கூறுவதுதான் மிக முக்கியமானதும் சுவராசியமானதும்,” என்கிறார் இந்திய - அமெரிக்க அரசியல் செயல்பாட்டு அமைப்பின் நிறுவன உறுப்பினரான ரபீந்தர் சச்தேவ்.
“லிக்ட்மேன் கூறுவது இதுதான். அவருடைய வழிமுறை, ஆட்சியில் இருக்கும் கட்சியின்கீழ், ஆட்சி நிர்வாகம் எப்படி நடைபெறுகிறது என்பதைத் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்துவதே” என்று, ஈடிவி பாரத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவிக்கிறார் சச்தேவ். இவர், லிக்ட்மேன் பணியாற்றும் அதே அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவரும், லிக்ட்மேனுடன் அடிக்கடி உரையாடல் மேற்கொண்டவருமாவார்.
”ஆட்சியில் உள்ள கட்சி, நன்றாக திறம்பட செயல்பட்டு, இந்த 13 அலகுகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அக்கட்சி ஆட்சியைத் தக்கவைக்கும். அவ்வாறு செயல்படவில்லை என்றால், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்” எனத் தெரிவிக்கும் சச்தேவ், லிக்ட்மேனின் இந்த மாதிரி, இருவேறு முக்கிய வித்தியாசமான கூறுகளை நமக்குத் தருவதாக விளக்குகிறார்.
”முதலாவதாக, லிக்ட்மேன் ஒரு வரலாற்றுப் பேராசிரியர் மட்டுமல்ல, அமெரிக்க வரலாற்றாசிரியர், அதிலும் அதிபர்கள் குறித்த வரலாற்றாசிரியர். அமெரிக்க வரலாற்றிலும், அமெரிக்கத் தேர்தல்களிலும், அமெரிக்க அரசியலிலும், எந்தெந்த நிகழ்வுகள் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்துள்ளன என்பதே அவரது ஆய்வுப் புலம். எனவே அமெரிக்க அரசியலின், அரசியல் வரலாற்றின் நிகழ்வுப் போக்கு குறித்த புரிதலும் புலமையும் ஒருங்கே பெற்றவர் அவர்” என பேராசிரியர் லிக்ட்மேன் குறித்து விவரிக்கிறார் சச்தேவ்.
”இரண்டாவதாக, அவரது காத்திரமான ஆய்வுகள் காட்டுவது என்னவென்றால், மிக முக்கியமான தீர்மானகரமான நிகழ்வுப் போக்குகளை இனம் கண்டு அவற்றின் தாக்கத்தை துல்லியமாக மதிப்பீடு செய்வதில் உள்ள நுண்ணியப் பார்வை. அதிபர் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்பத்திய கடந்தகாலப் போக்குகள், ஏற்படுத்தவிருக்கும் இன்றைய மற்றும் நாளைய போக்குகள் பற்றிய தெளிவு, கறாரான முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது. அதிபர்கள் எந்த சூழலில் வெற்றி பெருகிறார்கள் என்பதுடன், அப்போதைய போக்குகளை இனம் கண்டு, தரவுகளை சீரிய முறையில் ஆய்வு மேற்கொள்வதில் முத்திரை பதித்துள்ளார் லிக்ட்மேன்” என்கிறார் சச்தேவ்.
”லிக்ட்மேன் மாதிரியின் 13 காரணிகளில், குறுகிய கால வலுவான பொருளாதாரம் என்ற ஒன்றே ஒன்றுதான் குறுகிய கால அளவீட்டைக் கொண்டது. பிற அனைத்துமே நீண்டகால அளவீட்டைக் கொண்டவை” என மேலும் விளக்குகிறார் சச்தேவ்.
எப்படி லிக்ட்மேன் இந்த மாதிரியை உருவாக்கினார் என்பதில் ஆச்சரியமளிக்கும் செய்தி ஒன்று ஒளிந்துள்ளது. ரஷ்ய நில நடுக்க ஆய்வாளர் விளாடிமிர் கெல்லில் பொரோக்கை சந்தித்த பிறகே லிக்ட்மேனுக்கு அரசியலையும், நில நடுக்கத்தையும் இணைத்துப் பார்க்கும் புதிய பார்வை அவர் கண்முன் விரிந்தது. இந்த சந்திப்பு 40 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது என்றாலும், ஆழமான பாதிப்பை அது ஏற்படுத்தியுள்ளது.
சரி, அரசியலுக்கும் நில நடுக்கத்திற்கும் அப்படி என்ன ஒரு நெருங்கிய தொடர்பு இருக்க முடியும்? “யோசித்துப் பார்த்தால், இரண்டுக்குமிடையே உள்ள மிக நுட்பமான தொடர்பு புரிய வரும்” என்று தெரிவிக்கும் சச்தேவ், சமூக பூகம்பம் பற்றி விளக்குகிறார்.
“லிக்ட்மேன் மாதிரிப்படி, ஒரு பெரும் நில நடுக்கம் ஏற்பட்டால், அதாவது சமூகத்தில் சில காரணிகள் ஒன்று சேரும்போது, அந்த ஒன்றிணைவின் ஒட்டுமொத்த பேராற்றல் பூகம்பத்தையே உண்டு பண்ணும் சக்தி மிக்கது. இதன் அர்த்தம் என்னவென்றால், அத்தகைய நிலநடுக்கத்தின் தாக்கம் வெள்ளை மாளிகையையும் கவிழ்த்து விடும்,” என்று கூறுகிறார்.
லிக்ட்மேனின் கணிப்பிலும் அவரது ’திறவுகோல்கள்’ மாதிரியின் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள், 2016 அதிபர் தேர்தலில் அவர்து கணிப்பு மெய்யானதை நினைவு கூறுவது அவசியம். ”ஒரு ஜனநாயகக் கட்சி உறுப்பினராக இருந்த போதும், கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் தோல்வியடைவார், எதிபார்ப்புகளைப் பொய்யாக்கி குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் தான் வெற்றி வாகை சூடுவார்” என தனது கணிப்பை வெளிப்படையாக வெளியிட்டவர் இவர். ஆனால், அப்போதைய கருத்துக் கணிப்புகள் அணைத்தும் ஹிலாரியே அடுத்த அதிபர் எனக் கூறிய நிலையில், லிக்ட்மேன் வழக்கம்போல் துல்லியமான தமது கணிப்பில் தவறவில்லை.
டிரம்புக்கு இவர் சொல்வது : “வாய்ப்பே இல்ல இராசா!” என்பது மட்டுமே. ஆனால், இதன் காரணமாகவே, இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது.