உலகம் முழுவதுமான கோவிட் சிக்கலைப் பயன்படுத்தி உற்பத்தித் துறையில் ஒரு வல்லரசாக எழும்பி நிற்கும் தற்சார்புள்ள ஓர் இந்தியாவைக் கட்டமைப்பது பிரதமர் நரேந்திர மோடியின் பொற்கனவு. அதன்படியே அவர் தனது சமீபத்திய மான்கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் ஆத்ம நிர்பாரத (தற்சார்பு) என்பதை வலியுறுத்தும் அதிரடியான ஒரு சுலோகனைத் தந்திருக்கிறார்.
இந்தியாவில் உற்பத்தியான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று புத்தாண்டு சபதம் ஒன்றை எடுத்துக்கொள்ளும்படி மக்கள் அனைவருக்கும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். உலகத் தரத்திற்கு இணையாக உயரும்படி இந்தியத் தொழில்துறைக்கும் உற்பத்தித் துறைக்கும் அவர் அறிவுரை நல்கியிருக்கிறார்.
இந்தக் கனவை நிஜமாக்கும் பணியில் தங்களின் பங்கை ஆற்றும்படி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடமும், சிற்றளவான தொழில்களிடமும் மேலும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார். கரோனா வைரஸுடன் வந்த பொருளாதாரப் பின்னடைவால் வீழ்ச்சி பெற்ற உள்நாட்டு உற்பத்தித் துறைக்குப் புத்துயிர் ஊட்டும் வண்ணம் உள்நாட்டிலே உற்பத்தி செய்த பொருட்களை வாங்குவதற்கு மக்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள்.
போக்குவரத்து கட்டணங்கள் உயர்வு
உள்நாட்டுப் பொருட்கள் வாங்கக்கூடிய விலையில் கிடைப்பதை உறுதிசெய்வதற்கு அரசாங்கம் செய்ய வேண்டியது நிறையவே இருக்கிறது. முன்பணம் கொடுத்தால்தான் கச்சாப் பொருட்கள் கிடைக்கின்றன என்றும், போக்குவரத்துக் கட்டணங்களின் பாரம் தாங்க முடியாததாக இருக்கிறது என்றும் சிறுநிறுவனங்கள் புலம்புகின்றன.
உற்பத்தித் துறையையும், தேசியப் பொருளாதாரத்தையும் மீட்டெடுப்பதற்கு அரசு செய்யக் கூடிய முதல் நடவடிக்கை சிறுதொழில்களுக்கு நிதியுதவி வழங்குவதுதான். இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில், அவசியத் தேவைகள் என்ற பிரிவில் வராத விலையுயர்ந்த மரச்சாமான்களின், மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.
சுதேசியை முன்னேற்றும் திட்டத்தின்படி, 1,000 வகை வெளிநாட்டுப் பொருட்கள் கேந்திரிய போலீஸ் கல்யாண் பந்தர் கடைகளிலிருந்து நீக்கப்பட்டன. கடந்த ஏழு மாதங்களாக இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேசம் முழுவதும் ஒரே சீரான கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உறுதிபூண்டிருப்பது போலத் தோன்றுகிறது.
தேசத்தின் ஒருவருடத்து உள்நாட்டுச் செலவுகள் ரூபாய் 42 லட்சம் கோடி என்று கடந்த கால ஆய்வுகள் குறித்திருக்கின்றன. கோவிட் காரணத்தினால், வளர்ச்சி விகிதம் சற்று குறைந்திருந்த போதிலும், மின்னணுப் பொருள் தொழில் துறையின் வடிவம் வருடம் 2025க்குள் இரட்டிப்பாகி ஒன்றரை லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019இல் நாட்டின் இறக்குமதி ஏற்றுமதியைத் தாண்டியதால் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மையின் விளைவால் ரூபாய் 12 லட்சம் கோடி வர்த்தகப் பற்றாக்குறையை நாடு சந்தித்தது என்று மத்திய அரசின் வர்த்தகத் துறை சொன்னது. உள்நாட்டுப் பொருள்களுக்கான தேவையை அதிகப்படுத்த நீண்டகாலக் கொள்கை ஒன்று வடிவமைக்கப்பட்டால், வெளிநாட்டுச் சார்பு குறைந்துவிடும்; மேலும் தேசிய தொழில் வளர்ச்சியும் அபாரமாக உயர்ந்துவிடும்.
உதிரிப்பாகங்களின் உற்பத்தியில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை உடனடியாக மைய அரசு ஊக்குவித்து, அவற்றை உற்பத்தியின் அடுத்த கட்டத்தோடு இணைக்க வேண்டும். மேலும் அந்த நிறுவனங்களுக்கு அதி முக்கிய மட்டங்களில் உதவிக்கரம் நீட்டும் அமைப்புகளைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்.
நமது இளைய சமுதாயம்தான் தேசத்தின் இயற்கையான பலம். சீனாவோடும், ஜப்பானோடும் ஒப்பிடும்போது, இந்தியர்களின் சராசரி வயது குறைவு. ஒரு சராசரி இந்தியனின் வயது 28. வேலை செய்யும் திறன்படைத்த மக்கள் இந்த வயதில் இருப்பவர்கள்தான்; அவர்கள் மொத்த மக்கள் தொகையில் 64 சதவீதத்தினர் என்று புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
படித்தவர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்ட விகிதத்தை அதிகமாக்கும் அமைப்பை சுத்திகரிக்க வேண்டும். இக்கணத்தின் தேவை திறன்கொண்ட பணியாளர்களின் சதவீதத்தை உயர்த்துவதுதான். தேசத்தை கஷ்டப்படுத்திய தொழில் வீழ்ச்சித் துரதிர்ஷ்டத்தை வீழ்த்துவதற்கான லட்சியத் தந்திரோபாயங்களை கடைப்பிடித்தால், இந்தியப் பொருட்களுக்கான ஆகச்சிறந்த தேவையை நாம் உருவாக்க முடியும்.