நமது அரசியல்வாதிகள் , அரசியலமைப்புச் சட்டத்தின்படி எந்தவித விருப்பு வெறுப்பு ஏதுமின்றி, மக்களுக்காக சேவை செய்வோம் என உறுதிமொழி எடுக்கின்றனர். ஆனால், அவர்களின் இந்த உறுதிமொழிகளுக்கு முரணாகவே அவர்கள் நடந்துகொள்வதாகத் தெரிகிறது. அவர்கள் மீண்டும் பிரித்தாளும் முறையைக் கையில் எடுத்து தங்களுக்கு எதிரான அமைப்பினரை புல்டோசர்களை வைத்துத் தகர்க்க முயல்கின்றனர்.
சில பாஜக ஆளும் மாநிலங்களில் வீடுகளை இடித்து தகர்க்கும் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. இதனால், அவர்களின் மக்களுக்கு கிடைக்க வேண்டிய இயற்கையான நியாயத்தைத் தடுத்துள்ளனர். இந்த இடித்துத் தகர்க்கும் வேலைகள் அனைத்தும் சிறுபான்மையினரிடம் அச்சத்தை ஏற்படுத்தவே, என அலஹாபாத் உயர் நீதிமன்றம் நீதிபதி கோவிந்த் மாத்தூர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில், பிரயாக்ராஜ் வன்முறை சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட முகமது ஜவேதின் வீடு இடித்துத் தகர்க்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு, அந்த வீடு முறைகேடாக கட்டப்பட்டுள்ளதாகவும் அதனால் தான் தகர்க்கப்பட்டதெனவும் அரசு காரணம் கூறுகிறது. ஆனால், தகர்க்கப்பட்ட வீடு ஜவேதின் மனைவி பெயரில் தான் உள்ளது.
அவர் அதற்கு வீட்டு வரியும், குடிநீர் வரியும் முறையாக செலுத்தி வந்துள்ளார். இந்த வீட்டைத் தகர்க்கும் நோக்கத்திலேயே நோட்டீஸ்கள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.
முறைகேடாக கட்டப்பட்டுள்ள வீட்டைத் தகர்ப்பதற்கு முன்பே அந்த வீட்டின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர் விளக்கமளிக்க கால அவகாசமும் தரவேண்டும் என ஏற்கனவே மத்தியப் பிரதேச நீதிமன்றம் தெளிவாக விளக்கியுள்ளது. இப்படி, சட்டத்தை போராட்டம் செய்யும் மக்களை அடக்கப்பயன்படுத்தும் கருவியாக பார்க்க ஆரம்பித்தால் அது கலவரங்களிலேயே முடியும்.
இந்த விவாகரம் குறித்த தீவிர நோக்கத்தில், முன்னாள் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 12 சட்ட வல்லுநர்கள் இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், இப்படி வீடுகளைத் தகர்த்தெறிவது அரசியல் அமைப்புச் சட்டத்தை இழிவுபடுத்தும் செயல் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
விரைவில் நீதிமன்றம் தலையிட்டு இச்சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர். சராசரி மக்களின் ஒரே பாதுகாப்பு கவசம் நீதிமன்றங்கள் தான். அவைகள் அந்த சராசரி குடிமக்களுக்கு பாதுகாப்பு அரணாக நிலைக்க வேண்டும். சமீபத்தில் கார்கோனில் கலவரம் நடந்தபோது,
மத்தியப் பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷார் , ’கல்லெறியப் பயன்படுத்தப்படும் வீடுகள் சல்லி சல்லியாகத் தகர்க்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்தார். ஒரு வன்முறைச் சம்பவம் நிகழும்பொழுது அதற்குப் பொறுப்பானவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தான் தண்டிக்கப்பட வேண்டும்.
சமீபத்தில், உத்தரப்பிரதேசத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான சலாப்மனி திரிபாதி தனது ட்விட்டரில், காணொலி ஒன்றை பதிவிட்டார். அதில், சில காக்கி டவுசர்கள் அணிந்த ஓர் கும்பல் இளைஞர்களைக் கடுமையாகத் தாக்குகின்றனர். அதை பதிவிட்டு, அதன் கீழ் ’கலவரக்காரர்களுக்கு கிடைத்தது மறுபரிசு..!’ என்ற கேப்சனையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு பக்கம், “பிரச்னை செய்பவர்கள் மீது புல்டோசர்கள் ஏற்றப்படும்” என உத்தரப்பிரதேசத்தின் துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதாக் எச்சரித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் துணை பேரவைத் தலைவர் ஜேதாபாய் அஹிர் மீது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வீடு கட்டியதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுகுறித்து நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது. இதுபோல் பல மேல் அதிகாரத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்காத அரசாங்கம், போராட்டம் செய்பவர்களின் குரல்களை அடக்க புல்டோசர்களை ஏவி விடுகிறது.
இந்தக் கலாசாரம் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், டெல்லி, குஜராத், உத்தரகாண்ட், அஸ்ஸாமில் பின்பற்றப்பட்டு தற்போது கர்நாடகாவைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்களும், இந்த உ.பி. மாடலைக் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தீபக் குப்தா கூறுகையில், “ இப்படி அரசியல்வாதிகளும், காவல் துறையினரும் சட்டத்தைக் கையில் எடுத்தால் சராசரி மனிதன் எங்கு போவான்..?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்வி தற்போது அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இதுகுறித்து பாஜகவின் தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இதையும் படிங்க: பிகாரில் ரயிலுக்கு தீ வைத்த இளைஞர்கள்- அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு!