கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, மகாபாரத போரில் கர்ணனின் தேர் சக்கரம் போல பல துறைகள் சிக்கலில் சிக்கின. சில்லறை வணிகத் துறை அவற்றில் ஒன்று. சில்லறை வணிகத் துறையின் வளர்ச்சிக்கு வானமே எல்லையாக இருக்கும் என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டின. இருப்பினும், அந்தத் துறையை தகர்க்க தொற்றுநோய் எதிர்பாராதவிதமாக வந்தது
ஊரடங்கின் முதல் 100 நாட்களில், அவர்கள் சந்தித்த இழப்புகள் சுமார் ரூ. 15.5 லட்சம் கோடி என 40,000 வர்த்தகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கூறியிருந்தது. ஒவ்வொரு கட்டமாக வணிகம் செய்ய அனுமதித்ததன் மூலம் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், வர்த்தகம் இன்னும் இழந்த வேகத்தை மீண்டும் பெறவில்லை என்பதால் நிச்சயமற்ற தன்மை இன்னும் நிலவுகிறது.
சில்லறை வர்த்தகம் தனது பிரச்சினைகளை சமாளிக்க வேண்டுமானால், நிதி ஆதரவை வழங்க வேண்டும் என்று சில்லறை விற்பனையாளர் சங்கம் (RAI) கோருகிறது. வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் சில்லறைத் துறையினருக்கு சலுகைகள் வழங்கவும் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நுகர்வு என்பது நாட்டின் பொருளாதாரத்தின் உந்துசக்தி என்றால், சில்லறைத் துறை அதற்கான முதற்படியாகும். வளர்ச்சிக்கான கொள்கை தொடர்பான தடைகள் நீக்கப்பட்டு, வளர்ச்சிக்குத் தேவையான நிதி கிடைக்கும்போதுதான் சில்லறை வர்த்தகத் துறை பலம் பெற முடியும் என்பது RAI இன் வாதம். ஒரு தேசிய சில்லறை வர்த்தக கொள்கையை உடனடியாக வகுத்து உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று RAI கூறுகிறது. மேலும் சில்லறை வர்த்தகத்திற்கு குறு, சிறு நடுத்தர தொழில் அந்தஸ்தை வழங்கவும், முத்ரா யோஜனாவின் கீழ் மளிகை கடைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு நிதி உதவியை வழங்கவும் கோருகிறது. ஒரு விரிவான தேசிய சில்லறை வர்த்தக கொள்கை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், 2024க்குள் சுமார் 30 லட்சம் வேலைகளை உருவாக்க முடியும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளதால், இது தொடர்பாக மத்திய அரசு வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தேசிய சில்லறை வணிகத் துறையின் அளவு 2017ஆம் ஆண்டின் ரூ. 79,500 கோடியிலிருந்து 2026ஆம் ஆண்டில் ரூ 1.75 லட்சம் கோடியாக உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டிற்கான உலக சில்லறை வர்த்தக குறியீட்டில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சில்லறை வணிகம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காடாகும்.
நாட்டில் உருவாக்கப்படும் வேலைகளில் கிட்டத்தட்ட 8 விழுக்காடு இந்தத் துறை மூலம் தான் உருவாகிறது. இருப்பினும் சில்லறை வணிகத்தில் 88 விழுக்காடு அமைப்புசாரா துறையின் கைகளில் உள்ள காரணத்தினால், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சில்லறைத் துறையால் மலேசியா மற்றும் தாய்லாந்தில் பங்களிப்பதைப் போல் பங்களிக்க முடியவில்லை.
ஊரடங்கு காலத்தில் பணப்புழக்க நெருக்கடி காரணமாக கிட்டத்தட்ட 7 லட்சம் சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டன. தேவை மற்றும் விநியோகச் சங்கிலி முறிந்து போவதை விட பிரச்சினை ஆழமானது என்பதை இது வெளிப்படுத்துகிறது. மறுபுறம், இணைய வாய்ப்புகள் மூலம் தேசிய சில்லறை வணிகக் கொள்கை மூலம் வணிகத்தை எளிதாக்குவதை ஊக்குவித்தல், விதிமுறைகளை தாராளமயமாக்குதல், வணிகத்துடன் தொடர்புடைய தொழிலாளர் சக்திகளுக்கு திறன்களை வழங்குதல் மற்றும் சிறந்த பயன்பாட்டை அளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மத்திய அரசு கூறுகிறது.
ஒரு சில்லறை வர்த்தகக் கடையை நிறுவ ஒருவர் 16 முதல் 25 உரிமங்களை எடுக்க வேண்டியுள்ளது என்று வர்த்தகர் அமைப்புகள் கூறுகின்றன. பெற வேண்டிய உரிமங்களும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. இணையம் வழியாக ஒற்றை சாளர அனுமதி அளிக்க வேண்டும், நவீன தொழில்நுட்பத்தை மேற்கொள்வதற்கான மூலதனம் மற்றும் அனுமதிகளை வழங்குவதற்கான முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும் வர்த்தகர் அமைப்புகள் கோருகின்றன.
கிடங்குகள், குளிர் சேமிப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் செலவு சுமார் 8 விழுக்காடு அதிகரிக்கும். தேசிய கொள்கை இத்தகைய அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முற்படும்போதுதான் சில்லறை வணிகம் பிரகாசிக்க முடியும்.